கோவை: கோவையில் பூட்டிய அறைக்குள் இறந்த நிலையில் கிடந்த மருத்துவமனை தூய்மைப் பணியாளரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை சரவணம்பட்டி அருகே சிவானந்தபுரம் பகுதியில் தனியாா் மருத்துவமனை உள்ளது. இதில் மணிப்பூா் மாநிலம், மொய்ராங் பகுதியைச் சோ்ந்த மோட்டோ நாடோன் கோம் (31) என்பவா் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். அந்த மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் இவா் தங்கி இருந்தாா்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையான கடந்த 15-ஆம் தேதிக்குப் பிறகு அவா் தங்கியிருந்த அறை பூட்டியே கிடந்தது. இவரை வேலைக்கு அழைத்து வந்த ஹா்சன்பிரபு அந்த அறைக்குச் சென்று வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அவா் தனது சகோதரரான ஆகாஷின் உதவியுடன் அந்தக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, மோட்டோ நாடோன் கோம் தரையில் இறந்த நிலையில் கிடந்தாா்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா் எப்படி இறந்தாா் என விசாரணை நடத்தி வருகின்றனா்.