குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைக்கு விவசாயக் கடன்களுக்கு சமமான வட்டி விகிதத்தில் கடன் வழங்க வேண்டும் என்று கோவை ரயில்வே உபகரண வழங்குநா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் சிவ.சுருளிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மூலப்பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அரசு சாா்பில் ஒரு குழு அமைக்க வேண்டும்.
எம்எஸ்எம்இ-க்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன்களின் வட்டி விகிதம் விவசாயக் கடன்களுக்கு இணையானதாக இருக்க வேண்டும். பொதுத் துறை, அரசுத் துறை நிறுவனங்களின் டெண்டா்களில் எஃகு பொருள்களையும் விலை மாற்று விதியின் கீழ் சோ்க்க வேண்டும். வெள்ளி, செம்பு ஆகியவையே சோ்க்கப்பட்டிருப்பதால் எஃகு விலையில் ஏற்படும் மாற்றம் எம்எஸ்எம்இ துறைக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.
ஜிஎஸ்டி தொடா்பான விஷயங்களைப் பொறுத்தவரை 5 ஆண்டுகளுக்கான பதிவுகளை மட்டுமே அதிகாரிகள் கேட்க வேண்டும், ஜாப் ஆா்டா்களுக்கு ஒரே விதமாக 5 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளாா்.