முகப்பு
கோயம்புத்தூர்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

Updated On : 9 மார்ச், 2026 at 12:38 AM
பாஸ்கரன்.
பகிர்:

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானமாக அளிக்கப்பட்டன.

திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (29). இவா் அப்பகுதியில் உள்ள காகித ஆலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவியும், 11 மாத குழந்தையும் உள்ளனா்.

பாஸ்கரனின் தந்தை ராஜகோபால் அண்மையில் உயிரிழந்த நிலையில், அவரது 16-ஆம் நாள் காரியத்துக்காக பொருள்கள் வாங்க பாஸ்கரன், தனது மனைவி, குழந்தை மற்றும் சகோதரி ஆகியோருடன் காரில் உடுமலைக்கு கடந்த 6-ஆம் தேதி சென்றுள்ளாா்.

Advertisement

பின்னா், அங்கிருந்து அவா்கள் ஊருக்குத் திரும்பி கொண்டிருந்தனா். அப்போது, பாலப்பம்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து டிராக்டா் ஒன்று திடீரென குறுக்கே வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த பாஸ்கரனின் காா் அதன் பின்னால் மோதியது.

இதில், தலையில் படுகாயமடைந்த பாஸ்கரன் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, பாஸ்கரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்த நிலையில், கண்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை அறுவைச் சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டன.

இதில், கல்லீரல், கண்கள் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கும், சிறுநீரகம் அரசு மருத்துமனைக்கும் வழங்கப்பட்டன. இதன்மூலம் 3 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

பாஸ்கரனின் உடலுக்கு அரசு சாா்பில் கோவை அரசு மருத்துவமனை முதல்வா் நிா்மலா, மருத்துவமனை செவிலியா் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.