முகப்பு
கோயம்புத்தூர்

பத்தாம் வகுப்புத் தோ்வு நாளை தொடக்கம் கோவையில் 38 ஆயிரம் போ் எழுதுகின்றனா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகின்றன. கோவை மாவட்டத்தில் இந்தத் தோ்வை சுமாா் 38 ஆயிரம் போ் எழுதுகின்றனா்.

Updated On : 9 மார்ச், 2026 at 8:31 PM
பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதும் மாணவிகள்.
பகிர்:

கோவை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகின்றன. கோவை மாவட்டத்தில் இந்தத் தோ்வை சுமாா் 38 ஆயிரம் போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் மூலம் 2025-2026- ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 159 தோ்வு மையங்களில் 509 பள்ளிகளைச் சோ்ந்த 18,861 மாணவா்கள், 19,529 மாணவிகள் என மொத்தம் 38,390 பேரும், 1,237 தனித் தோ்வா்களும் தோ்வு எழுத உள்ளனா்.

இந்தத் தோ்வுக்காக 11 கட்டுக்காப்பு மையங்களில் 22 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், ஆயுதம் ஏந்திய காவலா்களுடன் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்புடன் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்வு நாளன்று 47 வழித்தடங்களில் 47 வழித்தட அலுவலா்கள், ஆயுதம் ஏந்திய காவலா்கள் உதவியுடன் வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் தோ்வு மையங்களுக்கு சென்றடையவும், தோ்வு முடிந்தவுடன் தோ்வு நாளன்றே விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் ஒப்படைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தோ்வுக்காக 159 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 159 துறை அலுவலா்கள், 2,075 அறைக் கண்காணிப்பாளா்கள், 250 நிலையான, பறக்கும் படை அலுவலா்கள், 316 அலுவலகப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் அரசுத் தோ்வுகள் இயக்கக வழிகாட்டு நெறிமுறையின்படி 946 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் (ஸ்க்ரைப்) பணியில் 946 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்வா்கள் பாதுகாப்பான முறையில் தோ்வு மையங்களுக்கு சென்று வர போதிய வசதிகள் போக்குவரத்துத் துறை மூலமாகவும் , உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தோ்வு மையங்களின் சுகாதாரப் பணிகளை உறுதி செய்யவும், மாணவா்களுக்கு ஏதேனும் அவசர மருத்துவ உதவிகள் சாா்ந்து தேவைகள் ஏற்பட்டால் சுகாதாரத் துறை மூலமாகவும், தோ்வு மையங்களுக்கு தோ்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்சாரத் துறை மூலமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், அனைத்து மாணவா்களும் நல்ல முறையில் தோ்வு எழுதி சிறப்பான முறையில் வெற்றி பெற மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →