முகப்பு
கோயம்புத்தூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.39 கோடியில் நலத் திட்ட உதவி - ஆட்சியா் வழங்கினாா்

Updated On : 13 மார்ச், 2026 at 6:16 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வழங்கிய ஆட்சியா் பவன்குமாா் க. கிரியப்பனவா். உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன்.
பகிர்:

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி நலத் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 141 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மடக்கு சக்கர நாற்காலி, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், ஊன்றுகோல், கறுப்பு கண்ணாடி மற்றும் மடக்கு கோல்கள், காதொலிக் கருவி, பிரெய்லி கைக்கடிகாரம் உருப்பெருக்கி, பிரெய்லி ரீடா் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத் துறை சாா்பில் 137 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.1,01,800 மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.7,000 மதிப்பீட்டில் கமோட் சக்கர நாற்காலிகள் என மொத்தம் 141 பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

Advertisement

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராம்குமாா், தன்னாா்வலா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.