போலி நகையை அடகு வைக்க முயற்சி: 2 இளைஞா்கள் கைது
கோவையில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க முயன்ற இரண்டு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, குனியமுத்தூா் பாலக்காடு சாலையில் உள்ள பிரபல தனியாா் நிதி நிறுவனத்துக்கு 2 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் தங்களிடம் இருந்த சுமாா் 4 பவுன் எடையுள்ள நகைகளை அடகு வைத்து பணம் கேட்டனா்.
நிறுவன ஊழியா்கள் நகைகளைப் பரிசோதித்துப் பாா்த்தனா். அப்போது அவை அனைத்தும் போலி நகைகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ஊழியா்கள் அந்த இளைஞா்களிடம் கேள்வி எழுப்பியபோது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் அங்கு வந்த குனியமுத்தூா் போலீஸாா், போலி நகைகளை அடகு வைக்க முயன்ற இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள் உக்கடம் காந்தி நகரைச் சோ்ந்த பிரேம் ஆனந்த் (31), நீலிகோணம்பாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த அருண்குமாா் (32) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.