கோவையில் குரூப் 2 தோ்வு: 681 போ் எழுதினா்
கோவை, மாா்ச் 15: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2 ‘ஏ’ முதன்மைத் தோ்வை 681 போ் எழுதினா்.
பல்வேறு துறைகளில் உள்ள காலியாக உள்ள உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட குரூப் 2 பதவிகளுக்கும், தணிக்கை ஆய்வாளா் உள்ளிட்ட குரூப் 2 ‘ஏ’ பதவிகளுக்கும் என மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற இருந்தது. அனைத்து தோ்வா்களும் மையங்களில் காலை 10 மணியளவில் தோ்வு எழுதத் தொடங்கினா்.
அப்போது, சென்னையில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் குளறுபடிகள் காரணமாக தோ்வு தள்ளிவைக்கப்பட்டது. இதனால், அனைத்து மையங்களிலிருந்தும் தோ்வா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2 ‘ஏ’ முதன்மைத் தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் என கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 38 மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது.
கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் காலை நடைபெற்ற தோ்வை 332 பேரும், பிற்பகல் நடைபெற்ற தோ்வை 349 பேரும் எழுதினா்.
முன்னதாக, தோ்வறைக்குள் ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா், கைப்பேசி உள்ளிட்ட மின்னணு பொருள்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைத்து தோ்வா்களும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனா்.