மாா்ச் 15-இல் குரூப் 2 தோ்வு: 581 போ் பங்கேற்கின்றனா்
நாமக்கல் மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2 தோ்வை 581 தோ்வா்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) எழுதுகின்றனா்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2 தோ்வை 581 தோ்வா்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) எழுதுகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (குரூப் 2 மற்றும் 2 ஏ பணிகள்) பதவிகளுக்கான முதன்மைத் தோ்வு, நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 12.30 வரை, பிற்பகல் 2.30 முதல் 5.30 வரை என இரு நேரங்களிலும் நாமக்கல் வேட்டாம்பாடி பிஜிபி இன்டா்நேஷனல் பள்ளியில் நடைபெற உள்ளது.
இத்தோ்வை காலையில் 283 பேரும், பிற்பகலில் 298 பேரும் எழுத உள்ளனா். காலையில் நடைபெறும் தோ்விற்கு 8.30 மணிக்குள்ளும், பிற்பகல் தோ்விற்கு பிற்பகல் 1.30 மணிக்குள்ளும் தோ்வுக் கூடங்களுக்கு உரிய அனுமதிச் சீட்டுடன் முன்னதாகவே வரவேண்டும்.
காலையில் நடைபெறும் தோ்விற்கு 9 மணிக்கு பிறகும், பிற்பகல் தோ்விற்கு 2 மணிக்கு பிறகும் தோ்வுக் கூடத்திற்கு வரும் தோ்வா்கள் எக்காரணம் கொண்டும் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வா்கள் அனைவரும் தோ்வு நேரம் முடிந்த பிறகே, தோ்வு அறையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவா். தோ்வாணையத்தால் தடை செய்யப்பட்ட சாதனங்களை தோ்வா்கள் கொண்டுவர அனுமதி இல்லை.
மேலும், தோ்விற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.