முகப்பு
கோயம்புத்தூர்

அரசு வழங்கிய இலவச ஆடுகள் மூலம் 32 ஆடுகளுக்கு சொந்தக்காரர்களான கிராமப் பெண்கள்

அரசு வழங்கிய நான்கு இலவச ஆடுகள் மூலமாக ஒரே ஆண்டில் 32 ஆடுகளுக்கு சொந்தக்காரர்களாகி

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

அரசு வழங்கிய நான்கு இலவச ஆடுகள் மூலமாக ஒரே ஆண்டில் 32 ஆடுகளுக்கு சொந்தக்காரர்களாகி உள்ளனர் இரு பெண்கள்.

தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக 2011 ஆம் ஆண்டு முதல் இலவச ஆடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், திருமணம் ஆகாத பெண்கள் ஆகியோருக்கு தலா நான்கு ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இலவச ஆடு பெறும் பயனாளிகள் கிராம அளவிலான ஏழு பேர் கொண்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பயனாளிக்கு ரூ.10,000 மதிப்பிலான நான்கு ஆடுகள், கூரை போட ரூ.2000, ஆட்டுக்கான காப்பீடு ரூ.300, போக்குவரத்து செலவு ரூ.150 என ரூ.12,450 வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் மூலமாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலூக்காவுக்கு உள்பட்ட ஏ.நாகூர் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான காளாள் (40) மற்றும் கணவனை இழந்த மீனாட்சி (40) ஆகிய இருவருக்கும் 2011 ஆம் ஆண்டு இலவச ஆடுகள் வழங்கப்பட்டன.

இதில் காளாளுக்கு வழங்கப்பட்ட நான்கு ஆடுகள் 9 ஆண், 7 பெண் ஆட்டுக் குட்டிகளை ஈன்றுள்ளன. அதேபோல மீனாட்சியிடம் வழங்கப்பட்ட ஆடுகளும் 9 ஆண், 7 பெண் ஆட்டுக் குட்டிகளை ஈன்றுள்ளன.

இதுகுறித்து காளாள் கூறியது:

பிறவியிலேயே ஒரு கால் போலியோவால் பாதிக்கப்பட்டதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது. கணவர் வீரன் (48) கூலி வேலைக்கு செல்கிறார்.

  கூலி வேலையில் குறைந்த வருமானமே இருந்ததால் குடும்பம் நடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது.

   இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, நான்கு பெண் ஆடுகள் எனக்கு வழங்கப்பட்டன.

   எனக்கு வழங்கப்பட்ட ஆடுகள் ஈன்ற குட்டிகள், அந்த குட்டிகள் ஈன்ற குட்டிகள் என 22 ஆட்டுக் குட்டிகள் இருந்தன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணத் தேவைக்காக 6 குட்டிகளை ரூ.15,000-க்கு விற்றுவிட்டேன். தற்போது என்னிடம் 16 ஆடுகள் உள்ளன.

   குறைந்த வருமானத்தில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அரசு வழங்கிய ஆடுகள் மூலமாக வரும் வருமானம் உதவிகரமாக உள்ளது. ஆடு விற்ற பணத்தை வைத்து பொங்கல் பண்டிகைக்கு மாடு வாங்க இருக்கிறோம் என்றார்.

பொள்ளாச்சி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் பி.நாகராஜன்:

   கோவை மாவட்டத்தில் ஏ.நாகூர் கிராமம் அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் முன் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த கிராம ஊராட்சியைச் சேர்ந்த 26 பயனாளிகளுக்கு 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலா நான்கு ஆடுகள் வழங்கப்பட்டன. 

   இதில் காளாள், மீனாட்சி ஆகிய இருவருக்கும் தாராபுரம் அருகே குண்டடம் பகுதியில் இருந்து ஆடுகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டன. இருவரும் விரும்பியதற்கேற்ப நான்கும் பெண் ஆடுகளாக வழங்கப்பட்டன.

 ஆடுகள் வழங்கப்பட்ட ஒரு வாரத்தில் குடற்புழுத் தடுப்பு மருந்தும், நோய்த் தடுப்பு ஊசிகளும் போடப்பட்டன.     கால்நடை மருத்துவர்களும் நாள்தோறும் ஆடுகளை கண்காணிப்பதுடன், ஆடுகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது குறித்து வாரம் ஒரு முறை அந்தந்த கிராமத்தில் முகாம் அமைத்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

  ஆடுகள் நோயால் பாதிக்கப்பட்டால் கால்நடை மருத்துவர் மூலமாக உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   ஏழை மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தை காளாள், மீனாட்சி ஆகிய இருவர் பயன்படுத்திக் கொண்டதுபோல, மற்ற பயனாளிகளும் பின்பற்றினால் முன்னேற்றம் அடையலாம் என்றார்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.