கோவை மாநகரில் தரைவழி மின் இணைப்பு வழங்கும் திட்டம் 70% நிறைவு: செப்டம்பரில் 100% பணிகள் நிறைவடையும்
கோவை மாநகரில் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த தரைவழி மின் இணைப்புத் திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. செப்டம்பரில் 100 சதவீதப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரில் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த தரைவழி மின் இணைப்புத் திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. செப்டம்பரில் 100 சதவீதப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் திருத்தி அமைக்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட மின் மேம்பாடு மற்றும் சீரமைப்புத் திட்டத்தின்கீழ், தரைவழி மின் இணைப்பு வழங்கும் திட்டப் பணிக்காக ரூ.310 கோடி ஒதுக்கப்பட்டது. கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தரைவழி மின் இணைப்பு அமைக்கும் பணி 2012 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அனைத்து நகரங்களிலும் கட்டமைப்புப் பணிகளை 2014 ஜூன் மாதத்துக்குள் ஒப்பந்த நிறுவனம் முடித்திருக்க வேண்டும். ஆனால், 2014-ஆம் ஆண்டு முடிக்கப்பட வேண்டிய இப்பணிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் தேர்வு நாள்கள், தேர்தல் பணி, மழைக் காலம் என பல்வேறு காரணங்களுக்காக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, இப்பணிகளை முடிக்க 2016 ஜூன் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இந்தத் தரைவழி மின் இணைப்பு வழங்குவதன் மூலமாக காற்று மற்றும் மழைக் காலங்களில் ஏற்படும் மின் துண்டிப்பு தடுக்கப்படும். மழைக் காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுவதால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. தரைவழி மின் இணைப்பு வழங்குவதன் மூலமாக இந்த விபத்துகள் தடுக்கப்படும்.
மேலும், தடையில்லா மின்சாரம் பொதுமக்களுக்கு கிடைக்கும். மின்தடை குறையும். குறைந்த மின்னழுத்தம், மின் இணைப்புத் திருடுதல் போன்றவையும் தடுக்கப்படும். மேலும், இந்த கேபிள் இணைப்புகள் வழங்கப்படுவதன் மூலமாக 40 ஆண்டுக்கு எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாது.
மேலும், கோவை நகரில் உள்ள சாலைகளில் உள்ள மின் கம்பங்களால் அதிக அளவிலான வாகன விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தரைவழி மின் இணைப்பு வழங்குவதன் மூலமாக சாலைகளில் உள்ள மின் கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு அனைத்தும் தரைவழி மின் இணைப்பாக மாற்றப்படும். தெருவிளக்கு கம்பங்கள் மட்டுமே இனி சாலைகளில் இருக்கும். இதன் மூலமாக அதிக அளவிலான விபத்துகள் தடுக்கப்படும். நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களும் குறையும்.
இதுதொடர்பாக, கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பாரதி கூறியதாவது: கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தரைவழி மின் இணைப்பு வழங்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பகுதிகளில் உள்ள 30 சதவீதப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தரைவழி கேபிள் மின் இணைப்புக்கு மட்டும் தற்போது வரை ரூ.190 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ராம் நகர், ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளிலும், அதிக அளவிலான அடர்ந்த மரங்கள் இருக்கும் பகுதிகளிலும் இப்பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 650 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒண்டிப்புதூர், குனியமுத்தூர், புறநகர்ப் பகுதிகளான வடமதுரை, சீரநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பளுவினைத் தாங்கக் கூடிய மின் கம்பிகள் போடப்பட்டுள்ளன.
புறநகர்ப் பகுதிகளில் 1,325 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்மட்ட கம்பிகளை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மின் இணைப்புக்காகத் தோண்டப்படும் குழிகளும் பணிகள் முடிந்தவுடன் மூடப்பட்டு வருகின்றன. 2016 செப்டம்பருக்குள் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 100 சதவீதப் பணிகளும் முடிக்கப்படும் என்றார்.