கோயம்புத்தூர்

சோதனைச் சாவடி கேமராக்கள் கணினி மூலம் கண்காணிப்பு: சுகுணாபுரத்தில் முதல்முறையாக அறிமுகம்

சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை கணினி மூலமாகக் கண்காணிக்கும் பணி, சுகுணாபுரம் புறக்காவல் சோதனைச் சாவடியில் கோவை மாநகரிலேயே முதல்முறையாகத் துவங்கியுள்ளது.

ஆர். தர்மலிங்கம்

சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை கணினி மூலமாகக் கண்காணிக்கும் பணி, சுகுணாபுரம் புறக்காவல் சோதனைச் சாவடியில் கோவை மாநகரிலேயே முதல்முறையாகத் துவங்கியுள்ளது.
 கோவை மாநகர காவல் துறை சார்பில் 37 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பொருளாதாரக் குற்றப் பிரிவு, ஆயுதப்படை, சைபர் கிரைம் உள்ளிட்ட பிரிவுகளில் 10-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களும் உள்ளன.
 மாநகருக்குள் வரும் வாகனங்களைக் கண்காணிக்க பாலக்காடு சாலையில் சுகுணாபுரம், அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம், திருச்சி சாலையில் ஒண்டிப்புதூர், தடாகம் சாலையில் கோவில்மேடு, சத்தியமங்கலம் சாலையில் சரவணம்பட்டி, போத்தனூர் சாலையில்  நஞ்சுண்டாபுரம், மேட்டுப்பாளையம் சாலையில் ஹவுஸிங் யூனிட் உள்பட 12 புறக்காவல் நிலைய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 இவற்றில் 10 சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. 2 சோதனைச் சாவடிகள் தேவைப்படும் சமயங்களில் மட்டும் செயல்படுகின்றன.
 நகரில் ஏதாவது ஒரு பகுதியில் நடைபெறும் விபத்து மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்கள் சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்கின்றனவா என்பதைக் கண்டறிவதில் சிக்கல் நிலவி வந்தது.
 இந்நிலையில், கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் முக்கிய வழித்தடத்தில் உள்ள சுகுணாபுரம் சோதனைச் சாவடியில் இரு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அண்மையில் கோவை வருகை தந்தபோது  கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி அந்த கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவற்றை கணினி மூலமாக காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
 இவற்றின் மூலமாக, கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களையும், எதிர்த் திசையில் கேரளம் செல்லும் வாகனங்களையும் தீவிரமாகக் கண்காணிக்க முடிகிறது.
 இதேபோல, கோவை மாநகரில் உள்ள அனைத்து புறக்காவல் சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி கணினி மூலமாகக் கண்காணித்தால், குற்றங்கள், விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களை எளிதில் கண்டறிய முடியும்.
 இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 ஏற்கெனவே கோவை மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் உள்ள அனைத்து கேமராக்களும் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
 மேலும், நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களையும் கேபிள்கள் மூலமாக காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் பணி நடைபெறுகிறது என்றார்.
 இதுகுறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) எஸ்.சரவணன் கூறியதாவது:
 கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படுகின்றன.
 இதன் ஒரு பகுதியாக, சுகுணாபுரம் சோதனைச்சாவடியைத் தவிர மீதமுள்ள 9 புறக்காவல் நிலைய சோதனைச் சாவடிகளிலும் கேமராக்களைப் பொருத்தி, கணினி மூலமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
 இந்தப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலமாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களையம் எளிதில் கண்டறியலாம்.
 இந்த சோதனைச்சாவடிகளில் கேமராவில் பதிவாகும் காட்சிகளை 15 முதல் 20 நாள்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதைக் கொண்டு  குறிப்பிட்ட தேதியில் எந்த நேரத்தில் ஒரு வாகனம் சோதனைச் சாவடியைக் கடந்தது என்பதைத் தெளிவாகக் கண்டறிய முடியும்.
 குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்களை எளிதில் கண்டறிய இந்த சோதனைச்சாவடி கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT