தினகரன், திவாகரன் கட்சிகள் காணாமல் போய்விடும்
டிடிவி. தினகரன், திவாகரன் ஆகியோரின் கட்சிகள் காணாமல் போய்விடும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டிடிவி. தினகரன், திவாகரன் ஆகியோரின் கட்சிகள் காணாமல் போய்விடும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் எதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் எனத் தெரியவில்லை. நீங்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். துணை ராணுவத்தினர் டெல்டா மாவட்டங்களில் பயிற்சிக்காகவே வந்துள்ளனர்.
டிடிவி. தினகரன் கட்சி தொடங்கி சில மாதங்களிலேயே பிளவு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் திவாகரன் தனிக்கட்சி தொடங்கியுள்ளார். இருவரது கட்சிகளும் நீண்ட நாள்களுக்குத் தாக்குப் பிடிக்காது. விரைவில் இருவரது கட்சிகளும் காணாமல் போய்விடும்.
கர்நாடக தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததற்கு கட்சித் தலைமையே காரணம் எனக்கூறுவது தவறானது. அங்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால், கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. காவலர்கள் உயிரிழப்பின்போது வழங்கப்படும் நிதி தடையின்றி வழங்கப்படும். நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறுவது தவறான தகவல் என்றார். பேட்டியின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.