"நீரா' பானத்தை வணிகம் செய்வதில்தான் வெற்றி உள்ளது: பொள்ளாச்சி வி.ஜெயராமன்
தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் "நீரா' பானத்தை விவசாயிகள் வணிகம் செய்வதில்தான் வெற்றி உள்ளது என்று சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரவித்தார்.
தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் "நீரா' பானத்தை விவசாயிகள் வணிகம் செய்வதில்தான் வெற்றி உள்ளது என்று சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரவித்தார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனக் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தமிழக அளவிலான "நீரா' பானம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை பொள்ளாச்சி பி.ஏ.பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் வரவேற்றார். தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் ஜே.சிரு, மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரிவாசு முன்னிலை வகித்தனர். இதில், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தமிழகத்தில் தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்பதால் தென்னையில் இருந்து "நீரா' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். நீரா பானம் இறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவேண்டும் என சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடத்திலும், தொடர்ந்து தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். முன்னோடி தென்னை விவசாயிகளையும் பல முறை அழைத்து சென்று முதல்வரைச் சந்தித்து நேரில் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், தமிழக அரசு சமீபத்தில் தென்னையில் இருந்து நீரா பானம் இறக்க அனுமதி அளித்ததுடன், சட்டப்பூர்வ அங்கீகாரமும் வழங்கியது. இந்நிலையில், நீரா பானம் இறக்க விவசாயிகள் அனுமதி பெறும் முறை, நீரா பானம் குறித்த புரிதல், நீரா பானம் இறக்குவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக விவசாயிகள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் பொள்ளாச்சியில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
"நீரா' வின் தூதர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்... இதில், நீண்டகாலமாக அனுமதி கிடைக்காமல் இருந்த நீரா பானத்திற்கு அனுமதி பெற உறுதுணையாக இருந்த சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமனுக்கு விவசாயிகள் பாராட்டுத் தெரிவித்து, அவருக்கு நீராவின் தூதர் என்று சிறப்பு கௌரவத்தை வழங்கினர்.
இதில், பொள்ளாச்சி வி. ஜெயராமன் பேசியதாவது:
தென்னையில் இருந்து நீரா பானம் இறக்கினால் விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவியாக இருக்கும். நீரா பானம் என்பது தாய்ப்பாலுக்கு இணையானது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நீராவை இறக்கி, பக்குவப்படுத்தி, வணிகம் செய்வதில்தான் வெற்றி உள்ளது. இதற்கான ஆலோசனைகள் அரசு சார்பில் வழங்கப்படும். அனுமதி பெறுவதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால் அதையும் எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் நீராவை உள்ளூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் சந்தைப்படுத்தி அதிக வருவாய் ஈட்டி பொருளாதாரத்தில் மேம்பட்டு வாழ வேண்டும். அரபு நாடுகள் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி முன்னேறுவதுபோல், தமிழகம் நீரா பானத்தை பயன்படுத்தி முன்னேறவேண்டும் என்றார்.
தமிழ்நாடு அரசு மாநில காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விநியோகத் தொடர்பு மேலாண்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ பேசியதாவது:
உலக அளவில், ஒரு ஹெக்டர் பரப்பில் உள்ள தென்னை மரத்தில் 10 ஆயிரம் தேங்காய் உற்பத்தியாவது தமிழகத்தில் மட்டும்தான். மற்ற நாடுகளில் 1 ஹெக்டேர் பரப்பில் 4, 500 தேங்காய் வரை மட்டுமே உற்பத்தியாகும். இந்திய அளவில் தென்னை சாகுபடி பரப்பளவில் கேரளம் முதல் இடத்திலும், கர்நாடகம் இரண்டாம் இடத்திலும், தமிழகம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. ஆனால், தேங்காய் உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள தென்னை சாகுபடி பரப்பில் கோவை மாவட்டம் 20 சதவீதமும், திருப்பூர் 12 சதவீதமும், தஞ்சாவூர் 8 சதவீதமும் ஆக உள்ளது. கோவை மாவட்டம்தான் தென்னை மரங்களுக்கு முக்கியத்துவமாக உள்ளது.
நீரா பானம் இறக்குவது முதலில் கோவை மாவட்டத்தில் துவங்கியுள்ளதால் இந்தத் திட்டம் வெற்றியடையும். நீராவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான சர்க்கரை உள்ளிட்ட பொருட்களையும் தயாரித்தால் கூடுதல் வருவாய் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றார்.
முன்னோடி விவசாயிகள் தாத்தூர் கிருஷ்ணசாமி கவுண்டர், ரத்தினம், அரசுத் துறை அதிகாரிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலர் பங்கேற்றனர். இதில், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் நீரா பானத்தை தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனைத் துறை ஆணையர் ஜே.சிருவுக்கு வழங்கினார்.