கோயம்புத்தூர்

மென்பொருள் கோளாறு: திண்டாடும் கோவை அஞ்சலகங்கள்

கோவையில் உள்ள அஞ்சலகங்களை மின்னணுமயமாக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக கடந்த ஒரு வாரமாக அஞ்சலகப் பணிகள் முடங்கியுள்ளன.

ஆர். தர்மலிங்கம்

கோவையில் உள்ள அஞ்சலகங்களை மின்னணுமயமாக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக கடந்த ஒரு வாரமாக அஞ்சலகப் பணிகள் முடங்கியுள்ளன.
 நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அஞ்சலகங்களும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையான சேவை வழங்கும் நோக்கத்துடன் கோர் சிஸ்டம் எனப்படும் மென்பொருளைப் பொருத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில் உள்ள கணினிகளையும் மேம்படுத்தும் பணி தனியார் மென்பொருள் நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை அஞ்சல் கோட்டத்தின் கீழ் 2 தலைமை அஞ்சலகம், 80 துணை அஞ்சலகங்கள், 96 கிளை அஞ்சலகங்கள் என மொத்தம் 178 அஞ்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அஞ்சலகங்களை மின்னணு மயமாக்கும் வகையில் கணினிகளில் கோர் சிஸ்டம் என்னும் மென்பொருள் மே 29ஆம் தேதி பொருத்தப்பட்டது. தமிழகம் முழுவதிலும் அனைத்து அஞ்சலகங்களிலும் (கிளை அஞ்சலகங்கள் நீங்கலாக) பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், பதிவு தபால், பணவிடை (மணியார்டர்) போன்ற அனைத்து சேவைகளும் இந்த கோர் சிஸ்டம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.
5 லட்சம் பேர் பாதிப்பு: கோவை அஞ்சல் கோட்டத்தில் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கு, தொடர் கணக்கு, கால நிர்ணய கணக்குகள், கிசான் விகாஸ் பத்திரங்கள், ஆறு ஆண்டு தேசிய சேமிப்பு மற்றும் பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட கணக்குகளை வைத்துள்ளனர். 
 இந்நிலையில், கோவை அஞ்சல் கோட்டத்தில் தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் புதிய மென்பொருள் பொருத்தப்பட்டது முதல் சேவைகள் முற்றிலுமாக முடங்கின. இதனால் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி அஞ்சலக ஊழியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இந்த முறைக்கு முன்னதாக பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, தபால் பதிவு போன்ற ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மென்பொருள் பொருத்தப்பட்டிருந்ததால் ஊழியர்களுக்கும் வேலைப் பளுவும் குறைந்து இருந்தது. ஆனால், இந்த கோர் சிஸ்டம் வந்ததில் இருந்து கணினி சரிவர இயங்காததால் வாடிக்கையாளர்களின் சேவையைப் பூர்த்தி செய்ய முடியாததால் அவர்களின் வெறுப்புக்கு ஆளாகின்றனர். மேலும், பணியை முடிக்க இரவு 8 மணிக்கும் மேல் ஆவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதைக் கண்டித்து அஞ்சலக ஊழியர்கள் போராட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
 ஊழியர்களுக்கு இந்தப் பிரச்னை என்றால் அஞ்சல் கோட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களும் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகி வருகின்றனர். அதில் ஒன்றுதான் மணியார்டர் பிரச்னை.  கோவை கோட்டத்தில் உள்ளவர்களுக்கு கடந்த 20 நாள்களாக மணியார்டர்  செய்ய முடியாத அவல நிலை உருவாகியுள்ளது.
நான்கு நாள்களாக முடங்கிய பீளமேடு அஞ்சலகம்: இந்த மென்பொருள் சேவை குறைபாட்டால் கோவை  பீளமேட்டில் உள்ள கிழக்கு அஞ்சலகத்தில் நான்கு நாள்களாக அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. இதனால் அஞ்சலகத்துக்குச் சென்ற வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்துக்குச் சென்றும் புகார் அளித்துள்ளனர்.
மேலும் அங்கு தற்காலிகமாகப் பணிக்கு வந்த ஊழியருக்கு கணினியின் ரகசிய குறியீட்டு எண் தெரியாததால்  இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதேபோல், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயத்தில் உள்ள அஞ்சலகமும் இரண்டு நாள்களாகச் செயல்படாததால் ஆயிரக்கணக்கனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் கோவை கோட்டத்தில் உள்ள 96 கிளை அஞ்சலகங்களில் இந்த முறை அமல்படுத்தப்படாததால் அங்கு பாதிப்பு இல்லை. ஆனால் அவர்கள் செய்யும் பணிகளை துணை அஞ்சலகங்களில் பதிவு ஏற்றம் 
செய்யும்போது இந்த பிரச்னை ஏற்படுகிறது. 
ஊழியர்கள் இல்லை: மென்பொருள் சேவை குறைபாட்டினால் பெரும்பாலான அஞ்சலகங்களில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும்பாலான கவுன்ட்டர்களில் ஊழியர்கள்இருப்பதில்லை. ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கும் வகையில் அவர்கள் வெளியே சென்றுவரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி அளவில் மூன்று கவுன்ட்டர்களிலும் ஊழியர்கள் இல்லை. இதனால் அங்கு சென்ற 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்அவதிக்குள்ளாகினர். 
கோவை அஞ்சல் கோட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த கோர் சிஸ்டம் மென்பொருள் பிரச்னையை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் விரைந்து சீரமைக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள், அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கையாகவே உள்ளது. ஆகவே, அஞ்சல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்: அஞ்சலகங்களில் கோர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ள கணினிகள் அடிக்கடி பழுதாகிவிடுவதால் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறோம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கோரி கடந்த மூன்று நாள்களாக கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்கிறார் தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் கோவை கோட்டச் செயலர் எபினேசர் காந்தி. 
அவர் மேலும் கூறுகையில், இதே பிரச்னைக்காக கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளோம். ஆகவே கணினி ஆன் லைனில் உள்ளதால் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.  இந்த கோர் சிஸ்டத்தில் வேலை செய்து வரும்போது திடீரென செயல்இழந்து விடுவதால், மீண்டும் பணிசெய்யும்போது இரு முறை பதிவாகிறது. இதனால் அஞ்சல் எழுத்தர், அஞ்சல் அதிகாரிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். அதேவேளையில், தபால்களை விநியோகிக்க ஊழியர்கள் காலையில் வெளியே சென்றுவந்தனர். ஆனால் தற்போது தபால்கள், மணியார்டர்களை விநியோகிக்க தாமதமாகவே வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT