வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீ விபத்து: உண்மையைக் கண்டறிய விசாரணைக் குழு அமைப்பு
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உண்மைக் காரணங்களை கண்டறிய 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உண்மைக் காரணங்களை கண்டறிய 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பிப்ரவரி 24-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. பொக்லைன் இயந்திரங்கள், 20 தண்ணீர் லாரிகள், 6 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீ பரவுவது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்தின் உண்மையான காரணங்களைக் கண்டறியும் வகையில் 5 மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைத்து மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளர் என்.நடராஜன், செயற்பொறியாளர் லட்சுமணன், கிழக்கு மண்டல செயற்பொறியாளர் வி.பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் சந்தோஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எதற்காக விசாரணைக் குழு... வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பல ஆயிரம் டன் குப்பை அப்படியே தேங்கிக் கிடக்கிறது. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்தும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. குப்பை கிடங்கில் செயற்கையாகத் தீ விபத்து ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்குள்ள குப்பைக் கிடங்கை அகற்றுவது தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் பின்னடைவு ஏற்படாமல் இருக்கவே மாநகராட்சி நிர்வாகம் கண்துடைப்புக்காக விசாரணைக் குழு அமைத்துள்ளதாக சமுக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.