தாயார் இறந்த நிலையிலும் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்
கோவையில் தாயார் உயிரிழந்த நிலையிலும் 10-ஆம் வகுப்பு மாணவர் பொதுத் தேர்வை எழுதினார்.
கோவையில் தாயார் உயிரிழந்த நிலையிலும் 10-ஆம் வகுப்பு மாணவர் பொதுத் தேர்வை எழுதினார்.
கோவை, வடவள்ளி, பொம்மனாம்பாளையம் மதுரை வீரன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (36). பிளம்பராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (32). இவர்களது மகன் அன்புச்செல்வன்(15).
கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வரும் இவர், தற்போது பொதுத் தேர்வு எழுதி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ராமச்சந்திரனும், வெங்கடேஸ்வரியும் இருசக்கர வாகனத்தில் இடையர்பாளையம் நோக்கிச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்தனர். இதில் காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில், வெங்கடேஸ்வரிக்கு செவ்வாய்க்கிழமை நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதன்கிழமை ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வு நடைபெற்ற நிலையில், தனது தாயாரின் உடல் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும் மாணவர் அன்புச்செல்வன் கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்துக்குச் சென்று அழுதபடியே தேர்வு எழுதினார்.
பொதுத் தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி 12.45 மணி வரை நடைபெறும் என்றாலும் அன்புச்செல்வனுக்கு சிறப்பு அனுமதியாக எந்த நேரத்திலும் தேர்வறையை விட்டுச் செல்லலாம் என ஆசிரியர்கள் சிறப்பு அனுமதி வழங்கினர்.
இதையடுத்து தேர்வை சற்று முன்னதாகவே முடித்துக் கொண்ட அன்புச்செல்வன், அரசு மருத்துவமனைக்கு வந்து அங்கிருந்து தனது தாயாரின் உடலுடன் தங்களின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்துக்கு புறப்பட்டார்.