கோவை அருகே மலைவாழ் குடியிருப்புகளில் அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி இரண்டாண்டுகளாகியும் நிறைவு பெறாததால் நிரந்தர வீடுகள் இல்லாமல் அடர்ந்த வனப் பகுதியில் மலைவாழ் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இதில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உள்பட்ட தூமனூர், சேம்புக்கரை மற்றும் மிளகாயன்பதி மலைவாழ் குடியிருப்புகள், ஆனைக்கட்டி மாங்கரை சோதனைச் சாவடியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளன. மூன்று குடியிருப்புகளிலும் சேர்த்து 130 குடும்பங்களில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு 1980 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மாநில அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் (ஓட்டு வீடு) கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கடந்த நிலையில் வீட்டின் கூரைகள், சுவர்கள் சிதிலமடைந்து வசிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டன.
மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து மழை காலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் ஒழுகும் நிலை இருந்து வந்தது. பராமரிப்பில்லாத வீடுகளால் மக்கள் பரிதவித்து வந்தனர். இதனால் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக்கோரி பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
44 பசுமை வீடுகள்
இந்நிலையில் 2016 -17 ஆம் நிதியாண்டில் மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்படும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க தூமனூர் மற்றும் சேம்புக்கரை குடியிருப்புகளில் 42 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து 2017 -18 ஆம் நிதியாண்டில் மேலும் 2 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 44 பயனாளிகள் ஏற்கெனவே வசித்து வந்த ஓட்டு வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் கான்கிரீட் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இவர்கள் தற்காலிகமாக வசிப்பதற்கு அருகில் ஓலைக் குடிசையை அமைத்துக்கொண்டனர்.
பசுமை வீடுகளுக்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் நிறைவு பெறவில்லை. கட்டுமானப் பணிகளை ஒப்பந்தம் எடுத்தவர்கள் திட்டத்தை முடிக்காமல் இழுத்தடிப்பதாகவும், அடர்ந்த வனப் பகுதியில் பாதுகாப்பான வீடுகள் இல்லாமல் குடிசையில் பரிதவித்து வருவதாகவும் மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பசுமை வீடு திட்டப் பயனாளிகள் தூமனூர் பாலன், சேம்புக்கரை சின்னக்கண்ணு ஆகியோர் கூறியதாவது:
கட்டுமானப் பணிக்காக நாங்கள் ஏற்கெனவே வசித்து வந்த வீடுகளையும் இடித்துவிட்டதால் தற்போது குடிசையில் வசித்து வருகிறோம். அடர்ந்த வனப் பகுதியாக இருப்பதால் யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவை குடிசைகளை சேதப்படுத்திவிட்டுச் செல்வதால் திரும்ப அமைக்க வேண்டியுள்ளது.
இரவு நேரத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் தங்கிக் கொள்கிறோம். ஆண்கள் மட்டும் குடிசையில் தங்கிக்கொள்கின்றனர். பருவமழை காலத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் குடிசைகளில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீடு கட்டும் பணி தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் பணிகளை முடிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். பெரும்பாலான வீடுகளுக்கு மேற்கூரை கூட அமைக்கப்படவில்லை. மேலும் பல முக்கிய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டால் தெளிவான பதில் அளிப்பதில்லை என்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் கூறியதாவது:
பசுமை வீடு திட்டத்தில் 300 சதுர அடியில் வீடுகள் கட்டி முடிக்க ரூ.2.10 லட்சம் நிதி போதாது. பற்றாக்குறை நிதியை பயனாளிகளே போட்டுக் கட்டிக்கொள்ள வேண்டும்.
மேலும் தூமனூர், சேம்புக்கரை போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு கட்டுமானத்துக்குத் தேவையான சிமென்ட், செங்கல், ஜல்லிக் கற்கள் உள்பட அனைத்துப் பொருள்களையும் சமவெளிப் பகுதியில்
இருந்துதான் கொண்டு செல்ல வேண்டும். இதனால், இங்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
மலைவாழ் மக்களால் கூடுதல் நிதிக்கான பங்களிப்பை அளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் தன்னார்வ, தனியார் நிறுவனங்களிடம் நிதி மற்றும் கட்டுமானப் பொருள்கள் வேண்டி உதவி கேட்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரும் கடந்த மாதம் மலைவாழ் குடியிருப்புகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஒருசில மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் பசுமை வீடுகள் ஒப்படைக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.