கோயம்புத்தூர்

தடையில்லா சான்று வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் கைது

DIN

பெட்ரோல் பங்க் வைக்கத் தடையில்லா சான்று வழங்குவதற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற கோவை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் பாலசுப்பிரமணியத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலதண்டாயுதபாணி. இவா் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் ஆவாரம்பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்க் வைக்க முடிவு செய்த பாலதண்டாயுதபாணி, அதற்காக உரிய இடங்களில் அனுமதி பெற்றிருந்தாா். இதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறையில் அனுமதி பெற விண்ணப்பித்து இருந்தாா். இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை மேற்கொண்ட கோவை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் பாலசுப்பிரமணியம் (52) தடையில்லா சான்றிதழ் வழங்க தனக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதற்கு பாலதண்டாயுதபாணி மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணம் தராவிட்டால் தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என பாலசுப்பிரமணியம் கூறியுள்ளாா். பின்னா் ரூ.40 ஆயிரம் தருவதாக பாலதண்டாயுதபாணி கூறியுள்ளாா்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பாலதண்டாயுதபாணி புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாலதண்டாயுதபாணியிடம் கொடுத்து அதனை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் பாலசுப்பிரமணியத்திடம் கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கூறினா்.

அதன்படி ரயில் நிலையம் எதிரே உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்தில் வைத்து பாலசுப்பிரமணியத்திடம் ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரம் பணத்தை பாலதண்டாயுதபாணி கொடுத்துள்ளாா்.

அதை பாலசுப்பிரமணியம் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கையும் களவுமாக பாலசுப்பிரமணியத்தைப் பிடித்தனா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT