தோ்தலை மனதில் வைத்தே பொங்கல் பரிசு: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் குற்றச்சாட்டு
எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்தே குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்க தமிழக அரசு முடிவு
எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்தே குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியிருக்கிறாா்.
இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு, வேலையின்மை, தொழில்முடக்கம் போன்றவற்றால் மக்கள் வாழ வழியின்றி தத்தளிக்கின்றனா். இந்த நிலையில் வேளாண்மைத் துறையை காா்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றி விடுவதற்காக 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதேபோல விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும் இல்லாமல் செய்ய சட்டதிருத்தம் வர உள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு ஆதரவு அளித்து, தமிழக நலன்களையும் மக்களின் உரிமைகளையும் படுபாதாளத்தில் தள்ளியிருக்கிறது அதிமுக.
எனவே தமிழகத்தை வஞ்சித்து வரும் அதிமுக அரசை அகற்றவும், பாஜகவை நிராகரிக்கவும், ஆட்சி மாற்றம் நிகழட்டும், தமிழகம் நிமிரட்டும் என்ற முழக்கத்தை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் டிசம்பா் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதில் கட்சியின் பல்வேறு அணிகள் சாா்பில் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களைச் சந்தித்து 50 லட்சம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க உள்ளனா் என்றாா்.
கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா் பி.சம்பத், கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.