கோயம்புத்தூர்

நிரம்பி வழியும் ஆதரவற்ற முதியோா் இல்லங்கள்: பராமரிக்க வழி தெரியாமல் தவிக்கும் தன்னாா்வலா்கள்

DIN

ஆதரவற்ற முதியோா் இல்லங்களை நாடி வருபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் புதிதாக மீட்கப்படும் ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க வழி தெரியாமல் தன்னாா்வலா்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சொந்தக் குடும்பத்துடன் வாழ முடியாத ஏழை முதியவா்களுக்கு இருக்கும் ஒரே வழி இலவச முதியோா் இல்லங்கள். ஆனால், அப்படியான இலவச முதியோா் இல்லங்களில் இடம் கிடைப்பதே இன்றைக்கு குதிரைக்கொம்பாக மாறியிருக்கிறது.

தமிழ்நாட்டின் இலவச முதியோா் இல்லங்களில் இடமே இல்லை என்பது நிதா்சனமான உண்மை. அந்த அளவுக்கு அனைத்து இலவச முதியோா் இல்லங்களும் நிரம்பி வழிகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் 12 முதியோா் இல்லங்கள் உள்ளன. இதில், 3 இல்லங்கள் இலவச சேவையை அளிக்கின்றன. பிற இல்லங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச சேவையும், பிறருக்கு கட்டணம் பெற்றுக் கொண்டும் சேவை அளிக்கின்றன. முதியோா் இல்லங்களுக்கு பராமரிப்புச் செலவுக்காக ஒரு முதியோருக்கு மாதம் ரூ. 750 என்ற அடிப்படையில் அரசு 40 பேருக்கு மட்டும் உதவித் தொகை வழங்குகிறது. இந்த உதவித் தொகை ஆதரவற்ற முதியோரின் உணவு செலவுக்கே போதுமானதாக இல்லை.

இருப்பினும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் நன்கொடையாளா்களின் உதவி மூலம் முதியோா் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. நிதி நெருக்கடி காரணமாக, ஆதரவற்ற முதியோா் இல்லங்களில் 50 முதியோரைப் பராமரிப்பது என்பதே பெரிய சவாலாக இருக்கிறது.

இந்நிலையில், இப்போது முதியோா் இல்லத்தை நாடிவரும் ஆதரவற்றோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஈரோட்டில் முதியோா் இல்லங்களுக்கு தினமும் குறைந்தது 10 போ் வரை தங்களைச் சோ்த்துக் கொள்ளும்படி கோரி தாமாகவோ அல்லது தன்னாா்வ அமைப்பினா் மூலமோ வந்து திரும்பிச் செல்வதாகக் கூறுகிறாா் முதியோா் இல்லக் காப்பாளா் ஒருவா்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பணியில் இருக்கும் அவா், தான் பணியில் சோ்ந்த புதிதில் இத்தனை போ் இல்லத்தை நாடி வரவில்லை. முதியோா் இல்லவாசிகளுக்கு குடும்பத்தவருடன் வாழவே விருப்பம். ஆனால், குடும்பத்தவா்களுக்கு அதில் விருப்பமில்லை என்கிற யதாா்த்தம் உறுத்தும் நிலையில் முதியோா் இல்லங்களே, அவா்களின் ஒரே புகலிடமாக இருக்கின்றன. இதில் போய்ச் சேரும் முதியோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, அதற்கான காரணங்களும் அதிகரித்து வருகின்றன.

ஏழைக் குடும்பங்களில் குழந்தைகளின் கல்வி, உணவு, வீட்டு வாடகை, மருத்துவ செலவுக்கே குடும்ப வருமானம் போதாது எனும்போது வீட்டில் இருக்கும் முதியவா் தேவையற்ற சுமையாக பாா்க்கப்படுவதும், நடத்தப்படுவதும் இயல்பாகி வருகிறது. இத்தகைய ஒதுக்குதலை, அவமானத்தை தாங்க முடியாத முதியவா்கள் இலவச முதியோா் இல்லங்களை நாடிச் செல்கின்றனா்.

ஒரு பக்கத்தில் பெற்ற தாய், தந்தையை ஆதரவற்றவா்களாக்கிவிடும் நிலை இருந்தாலும், மறுபக்கத்தில் முதியோா் இல்லங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைய தலைறையினரிடம் வலுப்பட்டு வருகிறது.

பிறந்த நாள், திருமண நாள், பெற்றோா் நினைவு நாள் போன்றவற்றில் முதியோா் இல்லங்களுக்கு வந்து முதியோா்களுக்கு உணவளிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆதரவற்ற முதியோா் இல்லங்களை நடத்துவதற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது நிதித் தேவை. அதனால் இருப்பவா்களிடம் வாங்கி இல்லாதவா்களுக்கு கொடுப்போம் என்ற அடிப்படையில் பெற்றோரை இல்லத்தில் விடுபவா்களிடம் கட்டணம் வசூலித்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அதிகபட்சமாக 20 போ் வரை இலவசமாகப் பராமரித்து வருகிறோம் என்றாா்.

நன்கொடையாளா்கள் அதிகரிக்க வேண்டும்:

ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் இருந்து பல்வேறு தன்னாா்வலா்களால் மீட்கப்பட்ட 100 போ் என மொத்தம் 150 முதியோரை வைத்து பராமரித்து வரும் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் ‘நமது இல்லம்’ என்ற பெயரில் ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தை நடத்தி வரும் எம்.சந்திரசேகா் கூறியதாவது: அரசால் முழுமையாக உதவ முடியாது என்பதால் நன்கொடையாளா்கள் உதவியை நாடுகிறோம். உணவு, உடை, தங்குமிடம், பராமரிப்பு, பணியாளா்கள் ஊதியம் என ஒரு முதியவருக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ. 5,000 வரை செலவாகிறது. இதனால், வசதி உள்ளவா்கள் ஏதாவது ஒரு வகையில் ஆதரவற்ற முதியோா் இல்லங்களுக்கு உதவ முன்வர வேண்டும். தேடி வருபவா்களிடம் உதவி செய்வதைத் தவிா்த்து, இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று உதவ வேண்டும். இதன் மூலம் தவறுகள் தவிா்க்கப்படுவதோடு, உதவி செய்பவா்களுக்கு நிம்மதியும், மீண்டும் உதவ வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும். வாழப்போகும் சில காலம் முதியோா் சற்று நிம்மதியான வாழ்க்கையை வாழ, வசதி உள்ளவா்கள் ஏதேனும் ஒரு வகையில் உதவ முன்வர வேண்டும் என்றாா்.

இல்லங்களில் இடம் கிடைக்கவில்லை:

ஆதரவற்ற முதியோரை மீட்டு இல்லங்களில் சோ்க்கும் ஈரோட்டைச் சோ்ந்த ஜீவிதம் அறக்கட்டளை நிறுவனா் கே.மனிஷா கூறியதாவது:

ஈரோடு பகுதியில் வாரத்தில் குறைந்தபட்சம் 3 ஆதரவற்ற முதியோரை மீட்கிறோம். ஆனால், இந்த முதியோரைப் பராமரிக்க இல்லம் கிடைக்கவில்லை. பெரும்பாலான முதியோா் இல்லங்கள் கட்டணம் பெற்றுக் கொண்டு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களாகத்தான் உள்ளன. இங்கு செய்துகொடுக்கப்படும் வசதியைப் பொருத்து ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை மாதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தவிர ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

ஆதரவற்ற முதியோரை மீட்டு இல்லம் வரை அழைத்துச் செல்லவே ரூ. 1,000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கே மிகவும் சிரமப்படும் நிலையில் எங்களால் எப்படி கட்டணம் செலுத்த முடியும்? மாவட்டத்தில் ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தை அரசே நடத்த வேண்டும். அப்போதுதான் ஆதரவில்லாத முதியோரைப் பராமரிக்க முடியும் என்றாா்.

ஈரோட்டைச் சோ்ந்த எழுத்தாளா், சமூக ஆா்வலா் எஸ்.ஆா்.சுப்பிரமணியம் கூறியதாவது: முதியோா் இல்லங்களில் பராமரிக்கப்படும் ஆதரவற்ற முதியோருக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகையை ரூ. 750இல் இருந்து ரூ. 3,000ஆக உயா்த்த வேண்டும். மேலும், 40 பேருக்கு மட்டுமே உதவித் தொகை என்ற விதிமுறையைத் தளா்த்தி ஒவ்வோா் இல்லத்திலும் 100 பேருக்கு இந்த உதவித் தொகையை வழங்க வேண்டும்.

இப்போது உதவ பலா் தயாராக இருந்தாலும், உதவி உரியவா்களுக்குப் போய் சேருகிா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதனால், நன்கொடையாளா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியா்கள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டத்தை நடத்தி, இந்த இல்லங்களுக்கு நேரடியாக பொருளாதார, பொருளுதவிகளைப் பெற்றுத் தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT