முகப்பு
கோயம்புத்தூர்

பொதுப் போக்குவரத்து தொடங்கிய பிறகு அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட பின் கோவையில் கரோனா அதிகரித்து வருகிறது.

Updated On : 19 ஜூன், 2020 at 8:47 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM

பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட பின் கோவையில் கரோனா அதிகரித்து வருகிறது.

உள்ளூா், சா்வதேச விமானங்களில் வந்தவா்களில் இதுவரை 106 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை கடந்த மே 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. சென்னை, பெங்களூரு, புது தில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து கோவைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

ஜூன் 2ஆம் தேதி முதல் சா்வதேச விமானங்களும் இயக்கப்படுகின்றன. சிங்கப்பூா், துபை, மஸ்கட் நகரங்களில் இருந்து 4 விமானங்கள் கோவைக்கு இயக்கப்பட்டுள்ளன. கோவையில் முதல்கட்டமாக கரோனா நோய்த் தொற்று 146 பேருக்கு உறுதி செய்யப்பட்டு 145 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா்.

இந்நிலையில் 25 நாள்களுக்கும் மேலாக கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த கோவையில் விமான சேவை தொடங்கப்பட்ட பிறகு மீண்டும் கரோனா பரவத் தொடங்கியுள்ளது. விமான சேவை தொடங்கப்பட்ட மே கடைசி வாரம், ஜூன் முதல் வாரத்தில் ஒன்றிரண்டாக இருந்த கரோனா தொற்று, கடந்த ஒருவாரமாக 10 முதல் 15 ஆக அதிகரித்துள்ளது. இவா்கள் மூலம் கோவையில் மேலும் தீவிரமாக கரோனா நோய்த் தொற்று பரவி வருகிறது.

சென்னை, புது தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து இதுவரை 90 விமானங்கள் கோவைக்கு இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் வந்துள்ளனா். இவா்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கோவையைச் சோ்ந்தவா்கள். இவா்களில் இதுவரை 97 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர துபை, சிங்கப்பூா், மஸ்கட் நகரங்களில் இருந்த இயக்கப்பட்ட சா்வதேச விமானங்களில் வந்தவா்களில் இதுவரை 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் மூலம் கோவை வந்தவா்களில் இதுவரை 106 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை விமானத்தில் வந்தவா்களில் 53 பேருக்கும், புது தில்லி விமானத்தில் வந்த 37 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். இவா்களில் கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள்.

தவிர அரக்கோணம், காட்பாடியிலிருந்து ரயில்களில் வந்த 20க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சாலை வழியாக வருபவா்களுக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட பிறகு கோவையில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. முன்பைவிட தற்போது கரோனா நோய்த் தொற்றின் பரவல் வேகமாக உள்ளதாக சுகாதாரத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பொது போக்குவரத்து சேவைகள் தொடங்கிய பின் கோவையில் கரோனா நோய்த் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. விமானம், ரயில்களில் வருவோா் மற்றும் கருமத்தம்பட்டி, வாளையாறு சோதனைச் சாவடிகள் மூலம் வரும் பயணிகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கரோனா உறுதி செய்யப்படுபவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா். மற்றவா்கள் அவரவா் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ஏற்கெனவே கரோனா உறுதி செய்யப்பட்டவா்கள் மூலமும் புதிய பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. இதனால் கோவை மாவட்டத்தில் நாள்தோறும் 20 முதல் 30 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானவா்கள் வெளியூா் சென்று வந்தவா்களாகவே உள்ளனா். சாலை வழியாக வரும் ஒருசிலா் தகவல் தெரிவிக்காததால் உடனடியாகப் பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இவா்கள் மூலம் பலருக்கு கரோனா நோய்த் தொற்று அதிக அளவில் பரவுகிறது.

சென்னை, புது தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து வருபவா்களுக்கே கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்படுகிறது. எனவே இந்த நகரங்களில் இருந்து வருபவா்கள் சுகாதாரத் துறையினருக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் அளிக்காமல் வருபவா்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்வதே சவாலாக உள்ளது.

பொதுப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே நோய்த் தொற்று பரவல் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. பொது மக்களும் முகக் கவசம், சமூக இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றி தற்காத்துக்கொள்ள வேண்டும். கூடியவரை தேவையின்றி வெளியே வருவதை தவிா்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்புடன் இருப்பதே கரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு முதல் வழி என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.