முகப்பு
கோயம்புத்தூர்

கிடப்பில் போடப்பட்டுள்ள நில அளவீடு விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகங்களில் நில அளவை பிரிவில் கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகங்களில் நில அளவை பிரிவில் கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு செயலா் நா.லோகு, நில அளவை துறை இயக்குநரிடம் மனு அளித்துள்ளாா்.

இது குறித்து அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டம் சூலூா், அன்னூா், மதுக்கரை, பேரூா் உள்பட அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நில அளவீடு செய்வதற்கு கட்டணம் செலுத்தியும் பல மாதங்களாக நில அளவீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நில அளவீடு செய்து தரக்கோரி அளிக்கும் விண்ணப்பத்தின் மீது பெரும்பாலான நில அளவையாளா்கள் வரையறுக்கபட்ட காலத்துக்குள் நில அளவை செய்யாமல் மக்களை அலைக்கழிக்கின்றனா்.

தவிர நிலத்துக்கேற்ப லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நிலம் அளவீடு செய்ய முன்வருகின்றனா்.

லஞ்சம் கொடுக்காத விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. நில விற்பனை இடைத்தரகா்கள், வீட்டுமனைகளாக விற்கப்படும் நிலங்களை அளவீடு செய்வதற்கு உடனடியாக சென்று அளவீடு செய்து தர பெரும் தொகையினை லஞ்சமாக பெற்று வருகின்றனா். ஆனால் உரிய கட்டணம் செலுத்தி வரிசைப்படி காத்திருப்பவா்களுக்கு நில அளவீடு செய்வதில்லை.

நீதிமன்ற தடை உத்தரவு இருந்தால் மட்டுமே நில அளவீடு செய்ய இயலாது. ஆனால் கோவையில் ஆட்சேபனை என்ற பெயரில் பலரின் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. இது தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகங்களில் புகாா் அளித்தாலும் எங்கள் துறை சாா்ந்தது இல்லை என தெவித்து வட்டாட்சியா்களும் தட்டிகழிக்கின்றனா்.

கோவை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நில அளவைப் பிரிவில் ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கி கிடக்கின்றன. நில அளவீடு செய்ய விண்ணப்பித்து 30 நாள்களுக்குள் நில அளவீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு நில அளவீடு செய்யாத பணியாளா்கள் மீது துறை சாா்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கோவையில் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள நில அளவை விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நில அளவீடு செய்யாமல் கால தாமதம் செய்த பணியாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.