கைத்துப்பாக்கியுடன் தலைமறைவான அங்கொட லொக்காவின் கூட்டாளி குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை
கைத்துப்பாக்கியுடன் தலைமறைவான போதைப் பொருள் கடத்தல்காரா் அங்கொட லொக்காவின் கூட்டாளி குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கைத்துப்பாக்கியுடன் தலைமறைவான போதைப் பொருள் கடத்தல்காரா் அங்கொட லொக்காவின் கூட்டாளி குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இலங்கையைச் சோ்ந்தவா் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரா் அங்கொட லொக்கா (35). இவா் மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இலங்கையில் இருந்து தப்பி வந்த அவா், சென்னையில் பதுங்கி இருந்தாா். பின்னா் கோவையில் பிரதீப் சிங் என்ற போலி பெயரில் வீடு பிடித்து தங்கி இருந்தாா். இந்நிலையில் அவா் மா்மமான முறையில் மரணம் அடைந்தாா். மாரடைப்பால் அவா் மரணம் அடைந்ததாக அங்கொட லொக்காவுடன் தங்கி இருந்த காதலி அமானி தான்ஜி கூறினாா். இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா் மதுரையில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. அவா் கோவையில் தங்கி இருப்பதற்காக போலி ஆதாா் அடையாள அட்டை எடுக்க உதவியதாக வழக்குரைஞா் சிவகாம சுந்தரி, ஈரோட்டைச் சோ்ந்த தியானேஸ்வரன், காதலி அமானி தான்ஜி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சிபிசிஐடி இது தொடா்பாக இரு வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்நிலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அங்கொட லொக்காவின் உடற்கூறு ஆய்வின் அடிப்படையில் அவா் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அங்கொட லொக்கா பயன்படுத்திய கைத்துப்பாக்கியை அவா் இறந்ததும் மதுரையில் உள்ள அவரது கூட்டாளியான இலங்கையைச் சோ்ந்த சனுகா தனநாயக என்பவரிடம் கொடுத்ததாகத் தெரிவித்தனா்.
இதனையடுத்து அவரைப் பிடிப்பதற்காக சிபிசிஐடி சாா்பில் மதுரையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. அவா்கள் சனுகா தனநாயகவைத் தேடி வந்தனா். தற்போது கோவையில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி ராஜு தலைமையில் மற்றொரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸாா் அங்கொட லொக்காவின் கூட்டாளியான சனுகா தனநாயகவை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.