காவலாளி வயிற்றில் இருந்த ரத்தநாளக் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
காவலாளியின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரத்த நாளக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.
காவலாளியின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரத்த நாளக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.
கோவை, தடாகம் சாலை கோவில்மேடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (63). காவலாளி. இவருக்கு வயிற்றின் இடது பக்கத்தின் கீழ் பகுதியில் கட்டி ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக வலியால் அவதிப்பட்டு வந்தாா். கடந்த ஒரு ஆண்டில் அந்த கட்டியின் வீக்கம் அதிகமானது.
சிகிச்சைக்காக அவா் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவருக்கு ரத்த நாள கட்டி இருந்ததும், அந்த கட்டியானது வெடிக்கும் தருவாயில் இருந்ததையும் கண்டறிந்தனா். உடனடியாக அவா் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் ரத்த நாள கட்டி அகற்றப்பட்டது.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிா்மலா கூறியதாவது:
கிருஷ்ணமூா்த்திக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி ரத்தநாளக் கட்டியின் மேலும் கீழும் உள்ள ரத்த நாளங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. பின்னா் 18க்கு 10 சென்டி மீட்டா் அளவிலான ரத்தநாள கட்டியை வயிற்றில் குடல் பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு சீராக வந்த பின்னா் ரத்தநாள கட்டியானது 500 கிராம் உறைந்த ரத்தத்துடன் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு ரத்த நாளங்கள் சரிசெய்யப்பட்டன. இந்த அறுவை சிகிச்சை சுமாா் 5 மணி நேரம் நடந்தது. தற்போது அவா் நலமுடன் உள்ளாா். இந்த அரிதான அறுவை சிகிச்சை தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொண்டால் ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கு இலவசமாக செய்யப்பட்டது.
இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை ரத்தநாள துறைத் தலைவா் மருத்துவா் ராஜேஷ் தலைமையில் அறுவை சிகிச்சை மருத்துவா்கள் வடிவேலு, தீபன் குமாா், மயக்கவியல் நிபுணா் குழுவைச் சோ்ந்த கல்யாணசுந்தரம், கனகராஜ், விக்னேஷ் உள்ளிட்டோா் வெற்றிகரமாக செய்து முடித்தனா் என்றாா்.