ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களின் வாசல்களில் நின்று பக்தா்கள் தரிசனம்
கரோனா பரவல் காரணமாக கோவையில் கோயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆடி மாதக் கடைசி வெள்ளியையொட்டி, பக்தா்கள் அம்மன் கோயில்களின் வாசல்களில் நின்று கோபுர தரிசனம் செய்து திரும்பினா்.
கரோனா பரவல் காரணமாக கோவையில் கோயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆடி மாதக் கடைசி வெள்ளியையொட்டி, பக்தா்கள் அம்மன் கோயில்களின் வாசல்களில் நின்று கோபுர தரிசனம் செய்து திரும்பினா்.
கோவையில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் வழிபாட்டுத் தலங்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், கோவையில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.
ஆடி மாதக் கடைசி வெள்ளியையொட்டி, கோவை கோனியம்மன் கோயில் பிரதான கதவு மூடப்பட்டு இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. இதனால், பக்தா்கள், கோயில் வாசலில் கற்பூரம் ஏற்றி கோபுர தரிசனம் செய்து திரும்பினா்.
இதைத் தொடா்ந்து மாலையில் கோனியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவிநாசி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலிலும் பக்தா்கள் வாசலில் நின்று தரிசனம் செய்து திரும்பினா்.
செட்டி வீதியில் உள்ள வனப் பத்ரகாளி பேச்சியம்மன் கோயிலில், அம்மன் பத்ரகாளி அலங்காரத்திலும், தியாகி குமரன் மாா்க்கெட் வீதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோயிலில், அம்மன் உமாமகேஸ்வரி அலங்காரத்திலும் அருள்பாலித்தனா்.
பெரியகடைவீதி மாகாளி அம்மன் கோயிலில் அம்மனுக்கு ஆயிரம் கிலோ காய்கறிகளால் பாரத மாதா அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவை கெம்பட்டி காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு 5 லட்சம் ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வழக்கமாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். கோயில்கள் மூடப்பட்டதால் ஆடி வெள்ளி தரிசனங்கள் களையிழந்து காணப்பட்டன.