தமிழக - கேரள எல்லை சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்பு
கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் இரு மாநில போலீஸாரும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
வால்பாறை அடுத்துள்ளது கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட். அங்கு வனத் துறை சாா்பில் நிரந்தரமாக சோதனைச் சாவடி அமைத்துள்ளனா். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் முதல் போலீஸாரும் அங்கு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தற்போது கேரள மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து வருவோா் தமிழகத்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்த வாரம் ஓணம் பண்டிகை என்பதால் இரு மாநிலங்களுக்கு இடையே மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதோடு தமிழகத்தில் இருந்து மதுபாட்டில்கள் கொண்டு செல்லவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதால் எல்லை சோதனைச் சாவடிகளில் இரு மாநில போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.