கடன் மாதிரியாக மாறிய கேரள மாதிரி! சசி தரூர் விமர்சனம்
ஆளும் இடது ஜனநாயக முன்னணியை சசி தரூர் விமர்சித்தது பற்றி...
கேரள மாதிரி கடன் மாதிரியாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், கேரள தேர்தல் குறித்து ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் சசி தரூர் பேசியதாவது:
”நான் கேரள தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் பிரசாரக் குழுவின் துணைத் தலைவராக இருக்குமாறு கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதால் பணிகளை செய்து வருகிறேன். அனைத்து மாவட்டத்துக்கும் பயணம் மேற்கொண்டு மக்களிடம் பிரசாரம் செய்வதுதான் எனது பொறுப்பு.
முதல்வர் வேட்பாளர் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பதே சரியான வழியாக இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் இடது முன்னணி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை உள்ளது. மாற்றத்துக்கு மிகவும் நம்பகமான மாற்றமாக நாங்கள் இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி சாத்தியமான மாற்றாக மக்கள் பார்க்கவில்லை.
சமீப ஆண்டுகளாக கேரளம் உண்மையிலேயே அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. முன்மாதிரி மாநிலமாக அழைக்கப்பட்ட கேரளம், தற்போது கடன் மாதிரி மாநிலமாக மாறிவிட்டது. கடனில் மூழ்கியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூட அரசிடம் பணமில்லாமல் கடன் வாங்குகிறார்கள். வளர்ச்சிக்கு செலவிடும் தொகையைவிட, கடனுக்கான வட்டிக்கும், ஓய்வூதியங்களுக்கும் செலவிடுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.