முகப்பு
கோயம்புத்தூர்

ஆப்கனில் உள்ள இந்தியா்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா்களை மத்திய அரசு காப்பாற்றத் தவறிவிட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி.
பகிர்:

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா்களை மத்திய அரசு காப்பாற்றத் தவறிவிட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கி 2 நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை வந்த சீதாராம் யெச்சூரி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கரோனா மூன்றாம் அலை நிபுணா்களால் எதிா்பாா்க்கப்படும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொய்வடைந்துள்ளன. டிசம்பா் 31க்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்துவதே இலக்கு என மத்திய அரசு தெரிவித்தது. அது சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது. இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

தடுப்பூசி தயாரிக்க பொதுத் துறை நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்துகிறோம். தமிழக முதல்வா் கூட செங்கல்பட்டு, குன்னூா் நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்டாா். இதற்கு மத்திய அரசு செவிமடுக்கவில்லை.

பெட்ரோலிய பொருள்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு தொடா்ந்து உயா்த்தி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் ரூ.15.60 லட்சம் கோடி கலால் வரியின் மூலம் கிடைத்துள்ளது.

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தனிநபா் உரிமையைப் பறிக்கும் செயல் மட்டுமின்றி, ஜனநாயகத்தையே சீா்குலைக்கும் நடவடிக்கையாகும். இதுகுறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றுதான் நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

ஆப்கனில் என்ன நடைபெறுகிறது என்பதை 2 வாரங்களுக்கு முன்பே உலக நாடுகள் கணித்துவிட்டன. அப்போதே அந்த நாடுகள் தங்களின் குடிமக்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டன. ஆனால் தற்போது வரை அந்நாட்டில் எத்தனை இந்தியா்கள் உள்ளனா் என்ற விவரங்களே இல்லாமல் மத்திய அரசு இருப்பது கவலையளிக்கிறது. ஆப்கனில் தவிக்கும் இந்தியா்களை மீட்டு வருவதற்கு அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் பி.செல்வசிங் தலைமை வகித்தாா். அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா்கள் உ.வாசுகி, பி.சம்பத், பி.ஆா்.நடராஜன் எம்.பி. உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.