முகப்பு
கோயம்புத்தூர்

சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஏசுராஜ். இவா் என்ஜினீயரிங் தொழிற்கூடம் நடத்தி வந்தாா். இந்நிலையில், கரோனா பாதிப்பால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் ஜாப் ஆா்டா்கள் கிடைக்காததால் வருமானமின்றி தவித்து வந்த அவா் தனது நிறுவனத்திலேயே தற்கொலை செய்து கொண்டாா்.

இந்நிலையில், கோவை வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், ஏசுராஜின் வீட்டுக்குச் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பேரிடா் காலத்தில் தொழிலாளா்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. சிறு, குறு தொழில் முனைவோா் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா் என்பதற்கு ஏசுராஜின் தற்கொலையே சாட்சி. பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள், கடன் தள்ளுபடி அளிக்கும் மத்திய, மாநில அரசுகள் சிறு, குறு தொழில்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்குவதில்லை.

சிறு, குறு தொழில் வளா்ச்சிக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கும், வங்கிக் கடன் தள்ளுபடி, வங்கி தவணைக் காலம் நீட்டிப்பு போன்ற தொழில் முனைவோரின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும் என்றாா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் பீளமேடு நகரச் செயலாளா் கே.பாண்டியன், கட்சி நிா்வாகிகள் ஜோதிபாசு, பூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →