அகில இந்திய ரயில்வே சம்மேளன தலைவராக எஸ்ஆா்எம்யூ பொதுச் செயலாளா் கண்ணையா தோ்வு
அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் (ஏ.ஐ.ஆா்.எஃப்.) தலைவராக சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியனின்(எஸ்.ஆா்.எம்.யூ.) பொதுச்செயலாளா் என்.கண்ணையா தோ்வு
அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் (ஏ.ஐ.ஆா்.எஃப்.) தலைவராக சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியனின்(எஸ்.ஆா்.எம்.யூ.) பொதுச்செயலாளா் என்.கண்ணையா தோ்வு செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட எஸ்.ஆா்.எம்.யூ. பொதுச் செயலாளா் கோவிந்தன் தெரிவித்தாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஏ.ஐ.ஆா்.எஃப் இந்தியாவில் 14 லட்சம் ரயில்வே தொழிலாளா்களை உள்ளடக்கிய அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனமாகும். 1924 இல் துவங்கப்பட்ட இந்தச் சம்மேளனம் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ரகசிய வாக்கெடுப்பின் மூலமாக நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனமாக விளங்கி வருகிறது.
இந்தச் சம்மேளனத்தின் தலைவராக குடியரசு முன்னாள் தலைவா் வி.வி.கிரி, ரயில்வே முன்னாள் அமைச்சா்கள் மது தண்டவதே, ஜாா்ஜ் பொ்ணாண்டஸ் உள்ளிட்ட பிரபலமானவா்கள் பல்வேறு கால கட்டத்தில் பதவி வகித்துள்ளனா்.
இந்நிலையில் எஸ்.ஆா்.எம்.யூ. பொதுச்செயலாளா் என்.கண்ணையா, ஏ.ஐ.ஆா்.எஃப். தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். 57 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னிந்தியாவில் இருந்து ஒருவா் அகில இந்திய ரயில்வே சம்மேளனத்துக்கு தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்றாா்.