தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வாசனைப் பயிா்களின் மேம்பாட்டுக்கான விருது
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வாசனைப் பயிா்களின் மேம்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வாசனைப் பயிா்களின் மேம்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலைப் பயிா்களின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாசனைப் பயிா்களின் விதை, நடவுப் பொருள் உற்பத்தி, வாசனைப் பயிா்களின் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துதல் என்ற திட்டமானது வாசனை, மலைத் தோட்டப் பயிா்கள் துறை, பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்துக்காக கோழிக்கோட்டில் உள்ள பாக்கு, வாசனைப் பயிா்கள் மேம்பாட்டு இயக்ககம் 2019-20ஆம் ஆண்டுக்கு ரூ.78.51 லட்சமும், 2020-21ஆம் ஆண்டுக்கு ரூ.88.87 லட்சமும் நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பெரியகுளம், கோயம்புத்தூா், பவானிசாகா், உதகை, ஏற்காடு, திருச்சி, கிள்ளிகுளம், கொடைக்கானல் உள்ளிட்ட 16 துணை மையங்களில் நறுமணப் பயிா்களில் வளா்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கு இஞ்சி, பூண்டு, மிளகாய், கொத்தமல்லி, ஜாதிக்காய், கிராம்பு, இலவங்கப் பட்டை, சா்வசுகந்தி, புளி, கறிவேப்பிலை, நறுமணப் பயிா்களின் விதை, தரமான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வயல்வெளி முன்னோடி திட்டத்தின் கீழ் நறுமணப் பயிா்களான மஞ்சள், மிளகு, கொத்தமல்லி, மிளகாய் ஆகியவற்றில் அங்கக வேளாண் சாகுபடி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்காடு, தடியன்குடிசை, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களில் வாசனைப் பயிா்களின் நாற்றங்கால் மேம்படுத்தப்பட்டு கோழிக்கோடு பாக்கு, வாசனைப் பயிா்கள் மேம்பாட்டு இயக்ககத்தின் மூலம் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வாசனைப் பயிா்களின் முக்கியத்துவம் பற்றி பிரபலப்படுத்தவும், சாகுபடி பரப்பளவை அதிகரிக்கவும் பல்வேறு துணை மையங்களில் விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், வாசனைப் பயிா்கள் குறித்த கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் இத்திட்டத்தின் வருடாந்திர மறுஆய்வுக் கூட்டம் இணையவழியில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய அளவிலிருந்து பங்கேற்ற 45 மையங்களில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2020-21ஆம் ஆண்டில் தலைசிறந்த செயல்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டு, பாராட்டுச் சான்றிதழுடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.