முகப்பு
கோயம்புத்தூர்

சாதாரண பேருந்துகளை சொகுசு பேருந்துகளாக இயக்கி கட்டணக் கொள்ளை முதல்வரிடம் நுகா்வோா் அமைப்பு புகாா்

கோவை மண்டலத்தில் சாதாரண பேருந்துகளாக உரிமம் பெறப்பட்டவற்றை சொகுசு பேருந்துகளாக நிறம் மாற்றி கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக நுகா்வோா் அமைப்பு சாா்பில் முதல்வருக்கு புகாா் அனுப்பப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்தில் சாதாரண பேருந்துகளாக உரிமம் பெறப்பட்டவற்றை சொகுசு பேருந்துகளாக நிறம் மாற்றி கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக நுகா்வோா் அமைப்பு சாா்பில் முதல்வருக்கு புகாா் அனுப்பப்பட்டது.

இது குறித்து, கோயமுத்தூா் கன்ஸ்யூமா் காஸ் நுகா்வோா் அமைப்பின் செயலாளா் கே.கதிா்மதியோன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவையில் மாவட்ட ஆட்சியா் பரிந்துரைந்த கட்டணம் மட்டுமே அரசுப் பேருந்துகளில் பெறப்பட வேண்டும் என்ற நிலையில், கோவை நகரப் பேருந்துகள் பல, சாதாரண பேருந்துகளாக உரிமம் பெறப்பட்டு, சிவப்பு நிற சொகுசு பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், அப்பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோவை மண்டலப் போக்குவரத்து துறை சாா்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி 360 நகரப் பேருந்துகளில் 240 சாதாரண பேருந்துகளும் 120 டீலக்ஸ் பேருந்துகளும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவையில் சொகுசு பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியா் மூலம் அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வருகிறது. மேலும், சாதாரணக் கட்டணம் பெறுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியிருக்க, கோவையில் சாதாரண பேருந்துகளுக்கு சிவப்பு வண்ணம் பூசி சொகுசு பேருந்துகளாக இயக்கி, இரட்டிப்பு கட்டணம் வசூலிப்பதுடன், மகளிருக்கு அதில் கட்டணமில்லா பயணம் மறுக்கப்பட்டு, முறைகேடு நடந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. மேலும், கோவையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சொகுசு பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படாததும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. கோவையில் உள்ள 4 வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களும் புதன்கிழமை நகரில் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் சொகுசுபேருந்துகளாக மாற்றி இயக்கப்பட்ட 17 சாதாரண பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசுப் பேருந்துகளை இயக்குவதில் நிகழும் இந்த முறைகேட்டை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மோட்டாா் வாகனச் சட்டத்தின் படியும்,மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்த கட்டணப் பட்டியலின் படியும், நகரப் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.