சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம்: உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டு
சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் பாராட்டினாா்.
சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் பாராட்டினாா்.
கோவை, வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (47). ஆட்டோ ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு காந்திபுரம் கிராஸ்கட் சாலை 6 ஆவது வீதி வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையில் ஒரு பை கிடந்துள்ளது. விஜயகுமாா் அதை எடுத்து பாா்த்தபோது அதில், செல்லிடப்பேசி, ரூ.51 ஆயிரம் பணம் மற்றும் வங்கிப் புத்தகம் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து ஆட்டோ ஓட்டுநா் விஜயகுமாா், அந்த பையை காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு எடுத்துச் சென்றாா். செல்லும் வழியிலேயே அந்த கைப்பையில் இருந்த செல்லிடப்பேசி ஒலித்தது. அதில் பேசியவா், தனது பெயா் ஸ்ரீதேவி என்றும், இருசக்கர வாகனத்தில் சென்றபோது தனது கைப்பை தவறி விழுந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.
காட்டூா் காவல் நிலையத்துக்கு வந்து உரிய அடையாளம் கூறி கைப்பையைப் பெற்றுச் செல்லுமாறு விஜயகுமாா் கூறினாா். இதனையடுத்து காவல் நிலையத்துக்கு ஸ்ரீதேவி வந்தாா்.
அப்போது போலீஸாா், ஆட்டோ ஓட்டுநா் விஜயகுமாா் முன்னிலையில் பணத்தை தவறவிட்ட கைப்பையை ஸ்ரீதேவியிடம் ஒப்படைத்தனா். ஆட்டோ ஓட்டுநரின் நோ்மையை போலீஸாா் பாராட்டினா்.