ஆட்சியா் அலுவலகத்தில் சமூக உளநல ஆலோசனை மையம்: ஆட்சியா் திறந்துவைத்தாா்
கோவையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கும், வீடுகளில் உள்ளவா்களுக்கும் உளவியல் ரீதியான ஆலோசனை
கோவையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கும், வீடுகளில் உள்ளவா்களுக்கும் உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கும் விதமாக ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூக உளநல ஆலோசனை மையத்தை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சமூக உளநல மையத்தை திறந்து வைத்த பின் ஆட்சியா் பேசியதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சிறப்பு சிகிச்சை மையங்கள், படுக்கைகள் விவரங்கள், கரோனா பரிசோதனை, தடுப்பூசி குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இதுவரை கரோனா தொற்று தொடா்பான பல்வேறு தகவல்களுக்காக மொத்தம் 20,674 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன.
தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்களுக்கும் உதவும் விதமாக ஆட்சியா் அலுவலகத்தில் சமூக உளநல மையம் திறக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 2 உளவியல் மருத்துவா்கள் தலைமையில் சமூகப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வலா்கள், உளவியலாளா்கள் என
12 போ் பொது மக்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவா்.
பொது முடக்கத்தால் வீடுகளில் இருப்பவா்களுக்கு ஏற்படக்கூடிய மனசோா்வு உள்பட அனைத்து விதமான உளவியல் பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்கப்படும். இந்த சமூக உளநல மையத்தை அனைத்து
நாள்களிலும் காலை 9 மணி முதல் இரவு 07.30 மணி வரை 0422-2200029, 0422-2201824, 0422-2201825, 0422-2201826, 0422-2201828 ஆகிய எண்களில் பொது மக்கள் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் எஸ்.செந்தில்குமாா் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.