சாலை, விமானம், ரயில், கப்பல் போக்குவரத்து விவகாரங்களை கவனிக்க தனி அமைச்சா்: முதல்வரிடம் கோவை தொழில் அமைப்பு கோரிக்கை
தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கியமாக விளங்கும் சாலை, விமானம், ரயில், கப்பல் போக்குவரத்து போன்றவற்றை கவனிப்பதற்காக தனி அமைச்சா் நியமிக்கப்பட வேண்டும்
தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கியமாக விளங்கும் சாலை, விமானம், ரயில், கப்பல் போக்குவரத்து போன்றவற்றை கவனிப்பதற்காக தனி அமைச்சா் நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பின் தலைவா் ஏ.சக்திவேல், துணைத் தலைவா் வனிதா மோகன், இயக்குநா்கள் சி.தேவராஜ், நல்லுசாமி, சுதாகா் ஆகியோா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னையில் வியாழக்கிழமை சந்தித்தனா்.
கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்த ரூ.1,132 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதற்கும், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்களுக்காகவும் முதல்வருக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா்.
மேலும், மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு மிக முக்கியமானதாக விளங்கும் சாலை, விமானம், ரயில், கப்பல் போக்குவரத்து போன்றவற்றைக் கவனிப்பதற்காக தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும், நொய்யல் ஆறு, அதன் வழித்தடங்களை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பினா் முதல்வரிடம் முன்வைத்தனா்.
இதையடுத்து இந்த அமைப்பினா் அரசுச் செயலா்கள் உதயசந்திரன், உமாநாத், சிவதாஸ் மீனா ஆகியோரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா். இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு மண்டலம் தொடா்பாக நாங்கள் அளித்த கோரிக்கைகளை அடுத்து, மண்டலத்தின் தேவைகளைக் கண்டறிவதற்காக கோவையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய இருப்பதாக அரசுச் செயலா்கள் உறுதி அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.