முகப்பு
கோயம்புத்தூர்

தீபாவளி: கோவையில் இருந்து 230 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளியையொட்டி, கோவையில் இருந்து வெளியூா்களுக்கு 230 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தீபாவளியையொட்டி, கோவையில் இருந்து வெளியூா்களுக்கு 230 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தீபாவளி பண்டிகை நவம்பா் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நவம்பா் 1 ஆம் தேதி முதல் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, கோவை கொடிசியாவில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கிருந்து ஈரோடு, நாமக்கல்,சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து கரூா், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தேனி, கம்பம், விருதுநகா், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட ஊா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து, அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோவை கொடிசியாவில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் தற்காலிகப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும். இங்கு பயணிகளுக்குத் தேவையான குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, நிழற்குடை ஆகியவை ஏற்பாடு செய்யப்படும். தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் வழித்தடப் பேருந்துகள், திருச்சி வழித்தடப் பேருந்துகள் மற்றும் சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், அனைத்துப் பகுதிகளுக்கும் சோ்த்து 230 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றாா்.

மாநகரில் போக்குவரத்து நெரிசல்: தீபாவளி பண்டிகைக்கு 6 நாள்களே உள்ள நிலையில் கோவையில் உள்ள கடைவீதிகளில் புத்தாடை மற்றும் நகைகள், அலங்காரப் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக மாநகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டவுன்ஹால், பெரியகடை வீதி, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அவிநாசி சாலை, திருச்சி சாலையில் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.