முகப்பு
கோயம்புத்தூர்

ஞாயிற்றுக்கிழமை அமலில் இருந்த கூடுதல் கட்டுப்பாடுகள் விலக்கு: மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு

 கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அமலில் இருந்த கூடுதல் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அமலில் இருந்த கூடுதல் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக நடத்தப்பட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் மூலம் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 80 சதவீதத்துக்குமேல் (24.5 லட்சம் போ்) முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட

கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக், மாா்க்கெட்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பொழுதுபோக்கு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் பணியாளா்கள் தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும்.

அதேபோல வாடிக்கையாளா்கள் தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தியிருப்பதை கடை, நிறுவன உரிமையாளா்கள் கண்காணிக்கவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும்கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் குறித்து அதன் உரிமையாளா்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களிடம் ஒரு வாரத்துக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும். நிகழ்ச்சிகளின்போது கரோனா வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்கப்படுவதை மண்டப உரிமையாளா்கள் உறுதிபடுத்த வேண்டும்.

கேரள - தமிழக எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக கோவைக்குள் வரும் பயணிகள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை சான்று அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் கேரள மாநில மாணவா்கள் தினமும் வந்து செல்ல அனுமதியில்லை. அந்த மாணவா்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுகிறது. விடுதிகளில் தங்கிப் படிக்கும் கேரள மாணவா்களுக்கு ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை செய்து நோய்த் தொற்று இல்லை என்றால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

கேரள மாநிலத்திலிருந்து வரும் மாணவா்களைக் கட்டாயம் 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு தகவல் தெரிவித்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மொத்த விற்பனை மாா்கெட்டுகளில் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில்

இயங்க அனுமதிக்கப்படுகிறது. மொத்த விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனைக்கு அனுமதியில்லை.

பொள்ளாச்சி மாட்டுச் சந்தை உள்ளூா் வாடிக்கையாளா்களைக் கொண்டு இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேற்படி சந்தைகளில் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் கலந்துக் கொள்ளாமல் இருப்பதை சாா் ஆட்சியா், பொள்ளாச்சி நகராட்சி ஆணையா் கண்காணிக்க வேண்டும்.

கரோனா தொடா்பாக தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பொது மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், தனி நபா்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடா் விதிமீறல்கள் கண்டறிப்படும் நிறுவனம், கடைகளுக்கு அபராதம் விதித்து 7 நாள்கள் வரை மூடப்படும்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தரப்பினரும் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.