வேட்டைத் தடுப்புக் காவலா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன்
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வேட்டைத் தடுப்புக் காவலா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வேட்டைத் தடுப்புக் காவலா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், 21 பயனாளிகளுக்கு ரூ.35.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வழங்கினாா்.
இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால்
கரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளதால்
வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் வேட்டைத் தடுப்புக் காவலா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க வனப் பகுதிகளில் அகழி, சோலாா் தடுப்பு அமைக்க வேண்டிய விவரங்கள் குறித்து வனத் துறையிடம் கேட்கப்பட்டுள்ளது.
அந்த விவரங்கள் முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
வனத் துறைக்குத் தேவையான ரூ.2 ஆயிரம் கோடி நிதி கேட்டு மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.