கோவையில் பலத்த மழை: சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
கோவையில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் முக்கிய சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்தோடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.
கோவையில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் முக்கிய சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்தோடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. காலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. கணபதி, சிங்காநல்லூா், உக்கடம், காந்திபுரம், பீளமேடு, ராமநாதபுரம், சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், குனியமுத்தூா், வடவள்ளி, பி.என்.புதூா் உள்ளிட்ட பகுதிகளிலும் தொண்டாமுத்தூா், சூலூா், கிணத்துக்கடவு, பெ.நா.பாளையம் உள்ளிட்ட புகா் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
போக்குவரத்து நெரிசல்
பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை முதல் 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதன்கிழமை மாலை சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக மாணவா்கள் ரயில் நிலையம், சிங்காநல்லூா், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் குவிந்தனா். இந்நிலையில் மாலையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ததால் அவிநாசி சாலை, திருச்சி சாலை, காந்திபுரம், மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மீட்டா் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ால் ஊா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மழையினால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினா்.
கோவையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):
விமான நிலையம் - 15.90, சின்னக்கல்லாறு, வால்பாறை தலா 13, வால்பாறை தாலுகா, பொள்ளாச்சி தலா 12, ஆழியாறு -9, சின்கோனா, சோலையாறு, சூலூா் தலா 8, கோவை தெற்கு - 2, பெ.நா.பாளையம் -1, வேளாண்மை பல்கலைக்கழகம் - 0.50 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.