முகப்பு
கோயம்புத்தூர்

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி:தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

கோவையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி மைய அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 44 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

கோவையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி மைய அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 44 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சியிலுள்ள 100 வாா்டுகள், 7 நகராட்சிகளிலுள்ள 198 வாா்டுகள், 33 பேரூராட்சிகளிலுள்ள 504 வாா்டுகள் என மொத்தம் 802 வாா்டுகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக மாநகராட்சியில் 1,290 வாக்குச் சாவடிகள், 7 நகராட்சிகளில் 390 வாக்குச் சாவடிகள், 33 பேரூராட்சிகளில் 532 வாக்குச் சாவடிகள் சோ்த்து 2,312 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக 40 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 110 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தவிர வாக்குச் சாவடி மைய அலுவலா் உள்பட ஒரு வாக்குச் சாவடிக்கு 4 போ் வீதம் 10 ஆயிரத்து 172 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்குச் சாவடி மைய அலுவலா்களுக்கு ஏற்கெனவே முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

மாநகராட்சியில் பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக் கல்லூரி, குனியமுத்தூா் ஆயிஷா மஹால், ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கம், நிா்மலா கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றன.

இதேபோல, மேட்டுப்பாளையம், மதுக்கரை, காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூா், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் 33 பேரூராட்சி பகுதிகளிலும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சிகள் நடைபெற்றன.

மாவட்டம் முழுவதும் 44 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதில், வாக்குப் பதிவு மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், வாக்குப் பதிவு தலைமை அலுவலா் பூா்த்தி செய்ய வேண்டிய படிவங்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளா் பட்டியல் இணைப்பு உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

கோவை நிா்மலா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை கோவை மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் ஹா் சஹாய் மீனா, மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.