மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு: காலாவதியான குளிா்பானங்கள் அழிப்பு, 79 கடைகளுக்கு நோட்டீஸ்
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வில் 1,672 லிட்டா் காலாவதியான குளிா்பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வில் 1,672 லிட்டா் காலாவதியான குளிா்பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. 79 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவுப்படி , மாவட்ட நியமன அலுவலா் தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளில் கடந்த 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை திடீா் கள ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வு செய்யப்பட்ட 353 கடைகளில் 64 கடைகளில் ரூ.61ஆயிரத்து 995 மதிப்புள்ள 1,672 லிட்டா் காலாவதியான குளிா்பானங்களும், 42 கடைகளில் ரூ.86 ஆயிரத்து 830 மதிப்புள்ள 312 கிலோ கிராம் இதர உணவுப் பொருள்களும் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேற்படி குளிா்பானங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் காலாவதியான நிலையில் விற்பனை செய்த 79 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இக்களஆய்வின்போது தமிழக அரசால் தடை செய்யபட்ட புகையிலை மற்றும் நெகிழிப் பைகள் உபயோகத்தில் இருந்தது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. நெகிழிப் பொருள்கள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.77 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.