கோவையில் நாளை 355 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: மாநகராட்சி ஆணையா்
கோவையில் ஞாயிற்றுக்கிழமை 355 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை 355 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெற உள்ளது. 32 நகா்ப்புற சுகாதார நிலையங்கள், 24 துணை சுகாதார நிலையங்கள், 3 அரசு மருத்துவமனைகள், 6 தனியாா் மருத்துவமனைகள், 50 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள், 137 அங்கன்வாடிகள் மற்றும் மண்டபங்கள், 10 நடமாடும் முகாம்கள் மற்றும் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் என மொத்தம் 355 இடங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளன. முகாம்களில் மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள், கண்காணிப்பாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சாா்ந்தவா்கள் பணியில் ஈடுபடவுள்ளனா்.
எனவே, இந்த முகாமில் பங்கேற்று 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.