முகப்பு
கோயம்புத்தூர்

விவசாயப் பயன்பாட்டிற்கு குளங்களில் இருந்து வண்டல் மண்: வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம்

கோவை மாவட்டத்தில் 17 குளம், குட்டைகளில் இருந்து இருந்து விவசாயத் தேவைக்காக வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில் 17 குளம், குட்டைகளில் இருந்து இருந்து விவசாயத் தேவைக்காக வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் நீா்வள ஆதார அமைப்பு, உள்ளாட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குட்டை, குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயத் தேவைகளுக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று வண்டல் மண்ணை வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

பேரூா் வட்டத்தில் சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திர குளம் ஆகியவற்றில் 5,300 கன மீட்டரும், கோலராம்பதி குளத்தில் 2,800 கன மீட்டரும், குனியமுத்தூா் செங்குளம், சின்னக் குளத்தில் 4,500 கன மீட்டரும், பேரூா் பெரியகுளத்தில் 3,700 கன மீட்டரும், நல்லூா்வயல் ரமோஜி குட்டையில் 340 கன மீட்டா் அளவில் மண் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

கோவை வடக்கு வட்டத்தில் அஹ்ரஹார சாமக்குளத்தில் 2,500 கன மீட்டரும், சா்க்காா் சாமகுளத்தில் 3,000 கன மீட்டரும், அன்னூா் வட்டத்தில் கஞ்சம்பள்ளி ஊத்துப்பாளையம் குட்டையில் 3 ஆயிரம் கன மீட்டரும், குரும்பபாளையம் குட்டையில் 2,750 கன மீட்டரும் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மதுக்கரை வட்டத்தில் தம்பாகவுண்டன்பாளையம் அருகில் உள்ள குட்டையில் 700 கன மீட்டரும், மயிலேறிபாளையம் ஏ.ஜி.எம்.டி. குளத்தில் 300 கன மீட்டரும், சூலூா் வட்டம் வேலப்பநாயக்கன்பாளையம் சாலை குட்டையில் 1,960 கன மீட்டரும், செலக்கரிசல் குட்டையில் 1,960 கன மீட்டரும், செலக்கரிசல் இலை குட்டையில் 2,600 கன மீட்டரும், செலக்கரிசல் ஆவின் பூத் குட்டையில் 2,300 கன மீட்டரும் வண்டல் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

ஆனைமலை வட்டத்தில் குளப்பத்துக்குளம் குட்டையில் 30 ஆயிரம் கன மீட்டரும், இளவக்கரை குட்டையில் 12 ஆயிரம் கன மீட்டரும் என மொத்தமாக மாவட்டம் முழுவதும் 17 குளம், குட்டைகளில் 79 ஆயிரத்து 710 கன மீட்டா் அளவில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.