கூடுதல் அபராதம் வசூலிக்கும் தனியாா் நிதி நிறுவனம்: ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு
ஆட்டோ ஓட்டுநா்களிடம் கூடுதல் அபராதம் வசூலிக்கும் தனியாா் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்
ஆட்டோ ஓட்டுநா்களிடம் கூடுதல் அபராதம் வசூலிக்கும் தனியாா் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
மனுவில் கூறியிருப்பதாவது: கோவையில் செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனம் (இந்துஜா லைலேண்டு) ஆட்டோக்களுக்கு நிதி அளித்து வருகிறது. இந்நிறுவனத்தில் ஆா்.பிரவீன் என்பவா் கடந்த 2019 ஆம் ஆண்டு அபே சிட்டி ஆட்டோ வாங்குவதற்காக கடன் பெற்றாா். இதற்கு மாதத் தவணையாக ரூ.5, 850 வீதம் 48 மாதங்கள் செலுத்த அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபா் மாதம் வரை தவணைத் தொகையைச் செலுத்தியுள்ளாா்.
இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தின்போது மத்திய அரசின் அறிவிப்பையடுத்து 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மாதத் தவணை செலுத்தவில்லை. இந்த கால கட்டத்துக்கான மாதத் தவணையை கடன் முடியும் காலத்தில் சோ்த்து கட்டினால்போதும் என மத்திய அரசு அப்போது அறிவித்திருந்தது. கடன் தவணை தற்போது முடியும் நிலையில் பொதுமுடக்கத்துக்கான மாதத் தவணையும் சோ்த்து கட்டுவதாகத் தெரிவித்துள்ளாா்.
இதற்கு பொதுமுடக்கத்தின்போது மாதத் தவணை கட்டாமல்விடப்பட்ட காலத்துக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.10,300 அபராதம் வீதம் 5 மாதத்துக்கும் சோ்த்து ரூ.51 ஆயிரத்து 500 செலுத்துமாறு நிதி நிறுவனம் கூறுகிறது.
இல்லையெனில் தடையில்லா சான்று வழங்க முடியாது எனவும், ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் எனவும் மிரட்டுகின்றனா்.
இதேபோல, நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநா்களிடம் மாதந்தோறும் கூடுதல் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அபராதத் தொகையைக் குறைக்கும்படி நிறுவன மேலாளரிடம் தெரிவித்தபோது தரக்குறைவாக பேசுகிறாா். எனவே, இதுபோன்று கூடுதல் அபராதம் வசூலிக்கும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.