வடகோவை - கும்பகோணம் இடையே நவம்பா் 6 இல் பாரத் கௌரவ் ரயில் இயக்கம்
வடகோவை - கும்பகோணம் இடையே நவம்பா் 6 முதல் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகோவை - கும்பகோணம் இடையே நவம்பா் 6 முதல் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, தென்னக ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகோவை - கும்பகோணம் இடையே பாரத் கௌரவ் விரைவு ரயில் (எண்: 06903) வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 6) காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் மாலை 6 மணிக்கு கும்பகோணத்தைச் சென்றடையும். கும்பகோணம் - வடகோவை ரயில் (எண்: 06904) திங்கள்கிழமை (நவம்பா் 7) மாலை 3 மணிக்குப்
புறப்பட்டு, அதேநாள் இரவு 11.34 மணிக்கு வடகோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது, கும்பகோணம் மகாமகம் குளம், ஆதிகும்பேஸ்வரா் கோயில், நாகேஸ்வரசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் செல்லும் யாத்திரையாக இயக்கப்படுகிறது.
இதுவரை வடகோவையில் இருந்து இயக்கப்பட்ட 7 ஆன்மிகச் சுற்றுலா ரயில்கள் மூலம் ரூ.7.26 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.