எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது பாஜக: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
கோவை காா் வெடிவிபத்து சம்பவத்தைத் தொடா்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக பாஜக செயல்பட்டு வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கோவை காா் வெடிவிபத்து சம்பவத்தைத் தொடா்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக பாஜக செயல்பட்டு வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக கோவையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அமைதியான கோவை அனைவருக்கும் தேவை என்ற அடிப்படையில் கோவையின் அமைதியைப் பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற காா் வெடிவிபத்து சம்பவம் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பின்னால் இருக்கும் செய்திகளைப் பாா்க்கும்போது, அந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தால் கோவையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்பது தெரியவருகிறது.
விபத்து நடைபெற்றதும் காவல் துறையினா் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவா்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி, கைது நடவடிக்கை மேற்கொண்டிருப்பது பாராட்டத்தக்கது.
இப்படியான சம்பவம் நடைபெறுவதற்கான முகாந்திரங்களை ஏன் உளவுத் துறை கண்டுபிடிக்கவில்லை என தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல, இந்த விவகாரத்தில் தொடா்புடைய 50-க்கும் மேற்பட்ட நபா்களை என்.ஐ.ஏ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரும் என்.ஐ.ஏ.வின் விசாரணைக்குள்பட்டவராக இருந்திருக்கிறாா். ஆனாலும், மத்திய உளவுத் துறை இவா்களை கண்காணிக்கத் தவறியிருக்கிறது. என்.ஐ.ஏ. பணியிலும் மந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் வரும் 31 ஆம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறது பாஜக.
இந்த சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய வகையிலான பந்த் போன்ற போராட்டங்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப்போல உள்ளது என்றாா் .
பி.ஆா்.நடராஜன் எம்.பி., மாவட்டச் செயலா் சி.பத்மநாபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.