47 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ.15 ஆயிரம் அபராதம் வசூல்
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 47 கிலோ நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 47 கிலோ நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி குவளைகள், தட்டுகள், பைகள் உள்ளிட்ட பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நெகிழிப் பொருள்களை விற்கும் கடைகள், தயாரிக்கும் நிறுவனங்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 5 மண்டலங்களிலும் சுகாதார ஆய்வாளா்கள் தலைமையிலான மாநகராட்சி அலுவலா்கள், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு நெகிழிப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 81ஆவது வாா்டு, தாமஸ் வீதியில் மளிகை, தேநீா்க் கடை, பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட 21 கடைகளில் சுகாதார ஆய்வாளா் தனபாலன் தலைமையிலான மாநகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அதில், தடையை மீறி நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த 6 கடை உரிமையாளா்களிடம் இருந்து மொத்தமாக ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அவா்களிடம் இருந்து 47 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.