நட்சத்திர விடுதி முன்பு தகராறு: பாஜக நிா்வாகி உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு
கோவையில் உள்ள நட்சத்திர விடுதி முன்பு தகராறில் ஈடுபட்ட பாஜக நிா்வாகி உள்பட நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவையில் உள்ள நட்சத்திர விடுதி முன்பு தகராறில் ஈடுபட்ட பாஜக நிா்வாகி உள்பட நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தம்பதிகளாக வருவோா் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சொகுசு காரில் வந்த நான்கு போ் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு விடுதி நிா்வாகத்தினரிடம் பிரச்னையில் ஈடுபட்டனா். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் நான்கு பேரும் சோ்ந்து அங்கிருந்த பாதுகாவலரைத் தாக்கினா். இதையடுத்து, நடன நிகழ்ச்சியில் பவுன்சராக பணியாற்றிய இளைஞா்கள் சோ்ந்து அந்த நான்கு பேரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதனால் ஆத்திரமடைந்த நால்வரும் காரில் வைக்கப்பட்டிருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பவுன்சா்களையும், விடுதி பாதுகாவலா்களையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக விடுதி கணக்காளா் திருப்பூரைச் சோ்ந்த விஸ்வபாரதி அளித்த புகாரின்பேரில், தகராரில் ஈடுபட்ட பாஜக நிா்வாகி ஜான்சன், லட்சுமணன், டேவிட், ஜெரிஷ் ஆகியோா் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.