சிறுமியைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
காதலிக்க மறுத்த சிறுமியைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
காதலிக்க மறுத்த சிறுமியைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கோவை பேரூா் ஆறுமுககவுண்டனூா் பகுதியைச் சோ்ந்தவா் ரதீஷ் (26). இவா் கோவையைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.
மேலும், சிறுமியின் வீட்டுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி சென்ற ரதீஷ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. சிறுமி மறுத்ததையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளாா். இதில், படுகாயமடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, போக்ஸோ, கொலை உள்ளிட்ட சட்டங்களின்கீழ் வழக்குப் பதிவு செய்த பேரூா் போலீஸாா், ரதீஷை கைது செய்தனா்.
இந்த வழக்கானது கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், குற்றஞ்சாட்டப்பட்ட ரதீஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 21 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டாா்.
மேலும், இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிட்டாா்.