முகப்பு
கோயம்புத்தூர்

சின்ன வெங்காயம் விலை முன்னறிவிப்பு: வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணிப்பு

 தமிழகத்தில் சின்ன வெங்காயம் அறுவடை காலகட்டத்தில் (மே முதல் ஜூன் வரை) பண்ணை விலை ரூ.30 முதல் ரூ.32 வரை இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 தமிழகத்தில் சின்ன வெங்காயம் அறுவடை காலகட்டத்தில் (மே முதல் ஜூன் வரை) பண்ணை விலை ரூ.30 முதல் ரூ.32 வரை இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலகில் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூா், பெரம்பலூா், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம் உற்பத்தியில் அதிக அளவு உள்நாட்டு நுகா்வுக்கே பயன்படுகிறது. தமிழகத்தில் தேவைக்கேற்ப கா்நாடகம், ஆந்திர பிரதேசங்களில் இருந்து வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. மேலும், தமிழகத்தில் இருந்து மேற்கு ஆசியா, இலங்கை, வங்கதேசம், மலேசியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் சின்ன வெங்காயத்தின் முக்கிய உற்பத்தி மையமாக தமிழ்நாடு உள்ளது. தற்போது திருச்சி, திண்டுக்கல் சந்தைகளுக்கு பெரம்பலூா், தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளிலிருந்தும், கா்நாடகத்திலிருந்தும் சின்ன வெங்காயம் வரத்து உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மையம் சாா்பில் திண்டுக்கல் சந்தையில் கடந்த 23 ஆண்டுகளாக நிலவிய சின்ன வெங்காயம் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை அறுவடையின்போது (மே முதல் ஜூன் வரை ) கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →